ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி.. கெடுத்ததே இந்த 2 பேர் தான்- ஓபிஎஸ் ஆதரவாளர் ‘பரபர’ குற்றச்சாட்டு!
தேனி : மத்திய அமைச்சரவையில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு இடம் கிடைக்க இருந்த நிலையில், அதைக் கெடுத்ததே இவர்கள் தான் எனக் குற்றம்சாட்டியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
நிகழ்கால பரதன் என ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் ஓ.பி.எஸ். அவருக்கு ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் கொடுக்கும் நற்சான்றிதழ் தேவையில்லை என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வே இல்லாமல், அவரைத் தோற்கடிக்கவும் வேலை செய்தவர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எனக் குற்றம்சாட்டியுள்ளார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆலோசனை
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தங்கியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதிமுக வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஈபிஎஸ் தரப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை
செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "ஜெயிக்கவே முடியாத ஜெயக்குமாருக்கு ஓபிஎஸ் பற்றி பேசத் தகுதியில்லை. சாதாரண நபர் ஒருவர் இவரை வென்றிருக்கிறார். தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் என்கிறார்கள். மற்றவர்கள் எப்படி ஜெயித்தார்கள்? எதுவாக இருந்தாலும் அதற்கு ஓபிஎஸ் தான் காரணமா? அடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகி விடுவார் என்று பயந்துபோய் அவர் பெயரை டேமேஜ் செய்து வருகிறார்கள்.

சொல் புத்தியும் கிடையாது
ஜெயக்குமாருக்கு சொல் புத்தியும் கிடையாது. சுய புத்தியும் கிடையாது. கள்ள ஓட்டு போட்டதாக திமுகவினரை ஏன் கட்டி வைத்து அடிக்க வேண்டும். சமூக பொறுப்புள்ள ஒருவர் காவல்துறையினரிடம் தான் பிடித்துக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து பொது இடத்தில் வைத்து அடித்து பின் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டவர் ஜெயக்குமார். அந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற பின் வெளியே வந்தவர் நாட்டுக்கே விடுதலை வாங்கித் தந்த தியாகி போல மலர் மாலை அணிந்து ஊர்வலமாகச் சென்றார்.

பிளவுக்கு காரணமே இவர்தான்
ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டுகிறேன் எனச் சொல்லி தனது தந்தையின் சமாதியை அந்த இடத்தில் எழுப்பியவர் ஆர்.பி.உதயகுமார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு முதல் காரணமே ஆர்.பி.உதயகுமார் தான். ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகிய இருவருக்கும் ஓ.பி.எஸ் குறித்து பேச தகுதியில்லை. அவர்கள் கொடுக்கும் நற்சான்றிதழ் ஓ.பி.எஸ்-க்கு தேவையில்லை. நிகழ்கால பரதன் என ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

அமைச்சரவையில் ஓபிஆர்
மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் இடம்பெறுவதாக இருந்தது அது பிடிக்காமல் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கெடுத்தவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார். கட்சியில் ஒருவர் அமைச்சர் ஆனால் கட்சிக்கு தானே பெருமை. அதை கெடுக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு இவருக்கு என குழப்பம் செய்தனர். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ்ஸை தோற்கடிக்க
தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க வேண்டும் என்று வேலை செய்தனர். ஓபிஎஸ் தோற்றால் அது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோற்றதாக அர்த்தம். அந்த உணர்வு கூட இல்லாமல் கெடுதல் வேலை செய்தார்கள். நாவடக்கத்தோடு பேசுங்கள். மேலும் மேலும் பேசி அசிங்கப்படாதீர்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications