தமிழகத்திற்கு 5 தலைநகர்.. படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் சொந்த ஊரில் அரசு வேலை.. சீமான் அதிரடி
தேனி: மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வியையும் அறிவையும் அளிப்போம் என்று பிரசாரத்தின் போது கூறிய சீமான், படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அவர்களின் சொந்த ஊர்களிலேயே அரசு வேலை அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முறையும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் நாம் தமிழர் தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் சார்பில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கையேந்தும் அவல நிலை
நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தன்மானத்திற்காக உயிரைவிட்ட என் கூட்டத்தை அவமான சின்னமாக மாற்றிவிட்டார்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் இலவச வேஷ்டிக்கும், அரிசிக்கும் கையேந்தும் நிலையில் ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறீர்கள்.

யாருடைய பணம்
50 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இலவசமாகக் கொடுக்கக்கூடிய பணம் யாருடையது? எங்களது பெற்றோர்கள் பணம் தானே. எங்களது உழைப்பு தானே. லஞ்சம், ஊழல் மூலம் பல கோடிகளைச் சேர்த்துக்கொண்டு அதில் நூறு ரூபாய்களை இலவசமாகக் கொடுக்கிறீர்கள். லஞ்சம், ஊழலை மக்களிடம் பழக்கிவிட்டார்கள்.

பல கோடி சம்பாதித்து இருப்பேன்
நான் கோபப்படுகிறேன் என்று சொல்கிறார்கள். அது என் மக்களின் மீது எனது வெளிப்பாடு. எனக்குக் கோபம் வரவில்லை என்றால் நான் கோடம்பாக்கத்தில் பல கோடி சம்பாதித்து இருப்பேன். எனது வருமானத்தைவிட எனது இனத்தின் மானமே பெரிது. உலகத்துக்குச் சோறு போட்டவர்களைக் கையேந்த வைத்தவர்கள் தான் இந்த ஆட்சியாளர்கள்.

அரசு வேலை
நானும் இலவசம் தருகிறேன். அறிவை இலவசமாகத் தருகிறேன். கல்வியைச் சமமாக இலவசமாகத் தரமாக தருகிறேன். படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு தருவேன். அதை அரசு வேலையாகவே தருவேன். உலகில் கல்வி அறிவில் தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், பின்லாந்து ஆகிய நாடுகள் சிறந்தவையாக உள்ளன. இந்த ஐந்து நாடுகளையும் முந்திக்கொண்டு தமிழ்நாட்டை முதலிடத்தில் கொண்டுவருவேன்.

புதிய தலைநகர்
மதுரையைத் தலைநகராக மாற்றுவேன். சென்னையும் ஒரு தலைநகர். கோவை மற்றும் திருப்பூர் இடையே ஒரு தலைநகரை உருவாக்குவேன். கன்னியாகுமரி மற்றும் திருச்சியும் தலைநகராக மாற்றுவேன். மக்களின் வாழ்வு இடங்களிலெல்லாம் அனைத்தும் கிடைக்க வழி செய்வேன். கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு அனைத்தும் கிடைக்க வழி செய்வேன். கைக்கட்டி இருக்கும் விவசாய சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள். விவசாயிகள் யாரிடமும் கையும் கட்டக்கூடாது கையும் நீட்டக் கூடாது" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications