பல் பிடுங்கியதாக புகார்.. பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ரத்து.. தமிழக அரசு சொன்ன காரணம் இதுதான்
நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். கடந்த ஆண்டு முதல் அம்பாசமுத்திரத்தில் பணி செய்து வந்தார். இவர் மீது நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதேபோல் பல்வீர் சிங் மீதான வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அண்மையில் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாலும், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வீர் சிங் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு ஐபிஎஸ் அதிகாரி நீண்ட நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட கூடாது என்பதற்காக தற்போது அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பல்வீர் சிங்கிற்கு பொறுப்பும் வழங்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications
