கட்சி மாற்றமா? எஸ்பி வேலுமணி - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. கவனிக்கும் பாஜக - அதிமுக
திருநெல்வேலி: தமிழக அரசியல் பாஜகவும், அதிமுகவும் கூட்டணியில் இருந்து விலகி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இருகட்சி தலைவர்களும் பொதுவெளியில் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து வரும் நிலையில் திருநெல்வேலியில் அதிமுக முன்னாள் அமைச்சரான எஸ்பி வேலுமணி மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி உடைந்தது. அதிமுக தனி கூட்டணி அமைத்தும், பாஜக தனி கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. ஆனாலும் இருகட்சிகளால் எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை.

தற்போது இரு கட்சிகளும் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக களஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவில் 10முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் மாவட்ட வாரியாக களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் கட்சியின் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றிய அறிவுரைகளை மூத்த தலைவர்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று திருநெல்வேலியில் மாவட்டத்துக்கான அதிமுக களஆய்வு இன்று நடந்தது.
திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, வரகூர் அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் அதிமுகவினர் இருகுழுவாக பிரிந்து மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவருமான எஸ்பி வேலுமணியும், பாஜக எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இவர்கள் 2 பேரும் சோபாவில் அருகருகே அமர்ந்து சிரித்தபடி பேசிய வீடியோ, போட்டோக்கள் வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜாவும் உடன் இருந்தனர்.
அதிமுக, பாஜக இடையே தொடர்ந்து வார்த்தை போர் நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கூட்டணியில் இருந்து அதிமுக நீக்கியது. இதற்கிடையே தான் தற்போது எஸ்பி வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோரின் இந்த சந்திப்பு என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் எஸ்பி வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் கட்சி மாறுவதாகவும் வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அதேபோல் பாஜக தலைவர்களும் கள்ள கூட்டணியை அதிமுக வைக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக தெரிவித்துள்ள நிலையில் எஸ்பி வேலுமணி, நயினார் நாகேந்திரனை சந்தித்துள்ளார்.
இதனால் இருவரில் யாரும் கட்சி மாறுகின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் நயினார் நாகேந்திரன் முதலில் அதிமுகவில் தான் செயல்பட்டு எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு தான் அவர் பாஜகவில் இணைந்தார். இருப்பினும் இந்த சந்திப்பு பற்றி இருவர் தரப்பிலும் உடனடியாக விளக்கம் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications