அப்பாவுவே சொல்லிட்டாரே.. "ஓசி இல்லை, இலவசம் இல்லை".. அப்ப நாளை மறுநாள் கன்பார்ம்டு போல.. மகிழ்ச்சி
1000 ரூபாய் மகளிருக்கு எப்போது தரப்படும் என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்
நெல்லை: 1000 ரூபாய் பெண்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த தகவலை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், ஈரோடு இடைத்தேர்தல் தொகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தபோது, அத்தொகுதி மக்களிடம் பேசும்போது திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். அப்போது, மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும் பேசினார்..
"கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதுக்குள்ளே, சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்.

கருணாநிதி மகன்
இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்று இருக்கிறது.. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சி காலத்தில் கஜானாவை காலி செய்து விட்டு கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள். அதை படிப்படியாக சரி நாங்கள் செய்து வருகிறோம்... எப்படியும், வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியாக சொல்கிறேன்... ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று கூறியிருந்தார்.

முத்தாய்ப்பு
அதேபோல, மார்ச் 5 மகளிர் தினத்தன்று, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், "அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்" என்று அறிவித்திருக்கிறார். இதே தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசும் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, "திராவிட மாடல் அரசின் உன்னத திட்டம், மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் வழங்குவது. அது இன்னும், 3 அல்லது மாதங்களில் வழங்ககக்கூடிய நாள்வரும்" என்றார்.

அப்பாவு
அந்தவகையில், நடக்க போகும் பட்ஜெட் கூட்டத்தில் இந்த 1000 ரூபாய் அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.. இதைத்தான் சபாநாயகர் அப்பாவு இன்றைய தினம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.. சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடந்தது.. எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மொத்தம் 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

அப்பாவு அதிரடி
பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசும்போது, "பெண்களை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினால் தான் நாடு முன்னேற்றம் அடையும். இதனால் தான் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தி பெண்களின் உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத் தொடரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 என்பது ஓசியும் இல்லை. இலவசமும் இல்லை. அது பெண்களுக்கான உரிமைத்தொகை" என்றார்..

1000 ரூபாய்
இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. எனினும், நாளை மறுநாள், பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானாலும்கூட, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. ஆக மொத்தம், சபாநாயகர் அப்பாவு, 1000 ரூபாய் நாளை மறுநாளே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications