காத்திருந்த தாய்.. வீட்டு வாசலிலேயே வளைத்த கும்பல்.. நெல்லை திமுக வட்டசெயலாளர் படுகொலை- பரபர பின்னணி
திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் திமுக வட்டசெயலாளர் மர்ம நபர்கள் மூலம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் கூட்டணிக்கு கொடுக்க போகும் இடங்களை தவிர மற்ற இடங்களில் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக திமுக உறுப்பினர்கள் விருப்ப மனுக்களை அளிக்கும் பணியும், இதற்கான நேர்காணலும் நடந்து வருகிறது.

திமுக நேர்காணல்
இந்த நிலையில் இன்று நெல்லையில் நடக்க இருந்த நேர்காணலில் திமுக நிர்வாகி பேச்சியம்மாள் கலந்து கொள்வதாக இருந்தது. இவரின் மகன் அபய் மணி என்ற பொண்ணுதாஸ் நெல்லையில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவர்களின் வீடு பாளையகோட்டையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்று நேர்காணல் நடக்க இருந்த நிலையில் அபய் மணி என்ற பொண்ணுதாஸ் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.

கொலை
இரு சக்கர வாகனத்தில் வந்த அபய் மணி என்ற பொண்ணுதாசை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். அவர் பைக்கில் வந்து கொண்டு இருந்த போது அவரை மறித்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொன்றது. இதில் உடல் முழுக்க காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் வீட்டில் இருந்து வெறும் 100 மீட்டர் தூரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

எப்படி நடந்தது
அபய் மணி தாயார் பேச்சியம்மாள் இன்று காலை நகராட்சி தேர்தல் நேர்காணலுக்கு செல்ல இருந்த நிலையில்தான் இந்த கொலை அரங்கேறி உள்ளது. கொலை நடந்த இடத்தில் காவல் ஆய்வாளர் துரைக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் சில சிசிடிவிகள் இருந்தன. இதை தற்போது காவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் மோதல் காரணமா?
5 பேர் கொண்ட கும்பல் அவரை கொன்று இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. அரசியல் மோதல் காரணமாக இந்த கொலை அரங்கேறி இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகின்றது. சொந்த மகன் கொலை செய்யப்பட்ட காரணத்தால் நகராட்சி தேர்தல் தொடர்பாக திமுக நடத்திய நேர்காணலில் திமுக நிர்வாகி பேச்சியம்மாள் கலந்து கொள்ள முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications