நெல்லை மட்டும் தான் டவுட்..புரூஸுக்கு அனுபவம் பத்தல! ராஜகண்ணப்பன் ஒரே போடு.. கடுகடுக்கும் காங்கிரஸ்
திருநெல்வேலி: நெல்லை தொகுதி மட்டும் தான் டவுட்.. மத்தபடி எல்லா தொகுதிகளையும் திமுக கைப்பற்றி விடும்.. நாளை நெல்லைக்கு தான் பிரச்சாரத்திற்கு போகிறேன் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசி இருப்பது திமுக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்னும் இரண்டு நாட்களில் ஓய இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவை பொருத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் பல்வேறு தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தீவிர பிரசாரம்: மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை பகுதியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சு தான் தற்போது காங்கிரஸ் கட்சியினரை கடுகடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அமைச்சர் ராஜ கண்ணப்பன்: நவாஸ் கனிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன்,”தற்போது 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்வது உறுதி.. ஆனால் நெல்லை மட்டும் கொஞ்சம் டவுட்.. வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸுக்கு கொஞ்சம் அனுபவம் பத்தவில்லை.. நான் நாளை அங்கு தான் பிரச்சாரத்திற்கு செல்கிறேன் அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை.. சமாளித்து விடலாம்” என பேசி இருக்கிறார். இதுதான் திமுகவினரை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியினரையும் சேர்த்து அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காங்கிரஸ் அதிருப்தி: அனைத்து தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு ராபர்ட் ப்ரூஸ்ஸின்பெயர் திருநெல்வேலி தொகுதிக்காக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் நெல்லை தொகுதியில் பல முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும் அதிமுக கூட்டணியில் ஜான்சி ராணியும் காங்கிரஸ் சார்பில் ராபர்ட்டும் போட்டியிடுகின்றனர். நெருக்கடி அதிகம்: இந்த நிலையில் திமுக அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி கைப்பற்றப்பட்டதாகவும் அதற்காக காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருப்பதும் நெல்லை தொகுதியை கூடுதல் கவனம் பெற வைத்திருக்கிறது. நயினார் நாகேந்திரன் நன்றி அறிமுகமான வேட்பாளராக இருப்பதால் ராபர்ட் ப்ரூஸிற்கு கடுமையான நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை திமுக அமைச்சர் ஒருவரே பொதுவெளியில் அதுவும் பிரசாரத்தின் போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வருத்தத்தை தெரிவித்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications