என்னப்பா சோதனை.. சரத்குமாருக்கு பிரமாண்ட பண மாலை.. அறுந்து தொங்க.. பேட்ச் வொர்க் பார்த்த தொண்டர்கள்!
நெல்லை: நெல்லையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில், சரத்குமாருக்கு பிரமாண்ட பண மாலை அணிவித்தனர். அப்போது மாலை அறுந்து தொங்கிய நிலையில், தொண்டர் ஒருவர், இன்னொருவரின் தோளில் ஏறி, பண மாலைக்கு 'பேட்ச் வொர்க்' செய்தார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கட்சியினர் சார்பில் சரத்குமாருக்கு பிரமாண்ட பண மாலை அணிவிக்கப்பட்டது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட பண மாலையை கிரேன் மூலம் அணிவிக்க முயற்சித்தனர்.

கிரேனில் தொங்கிய பண மாலையை, சரத் குமாருக்கு அணிவிக்கும் வகையில், கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால், அந்த நேரம் பார்த்து, கிரேன் கீழே இறங்கவில்லை. மேடையில் நின்ற கட்சியினர், சரத் குமாருக்கு மாலை போட்டுப் பார்க்கும் ஆர்வத்தில், மேலே தொங்கிய மாலையை பிடித்து இழுக்க, அது அறுந்து தொங்கியது. இதையடுத்து, தொண்டர் ஒருவர், இன்னொரு தொண்டரின் தோளில் ஏறி, அறுந்து போன பண மாலைக்கு பேட்ச் வொர்க் பார்க்க ஆரம்பித்தார்.
இந்த நிகழ்வால் நொந்து போன சரத்குமார், மைக்கில், "நீங்கள் மாலையை அணிவித்ததாகவே எடுத்துக் கொள்கிறேன். பரவாயில்லை. எனக்கு பண மாலை அணிவிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கும் ஆசைக்கும் நன்றி." எனப் பேசினார். ஆனால், விடாத தொண்டர்கள், "தலைவா, மாலையை கட்டியாச்சு.. வாங்க வந்து மாலையை போட்டுக்கங்க" என குரல் எழுப்பினர்.
இதையடுத்து, மீண்டும் வந்து நின்று மாலை மரியாதையை ஏற்றுக்கொண்டார் சரத் குமார். பிரமாண்டமான பண மாலையை கட்சியினர் இரு புறமும் தாங்கிப் பிடிக்க, மரியாதையை ஏற்றுக் கொண்டார் சரத்குமார். அப்போது உற்சாகமாக மலர்களை தூவி, கொண்டாடினர் சமத்துவ மக்கள் கட்சியினர். முன்னதாக, ஏற்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட சலசலப்பு அதன் பிறகுதான் அடங்கியது.
இந்தக் கூட்டத்தில் பேசிய சரத் குமார், "நீங்கள் எடுத்த காரியத்தை ஜெயிப்பீர்கள் என இன்று கூட என் மனைவி சொன்னார். நீங்கள் நிச்சயமாக 2026ல் முதலமைச்சர் தான் என என் மனைவி சொன்னார். சமீபத்தில், என் மாமியார் கீழே விழுந்து அடிபட்டு போனார்கள். அடிபட்டவரை காண நான் சென்றபோது, ஐயா நான் உங்களை எப்போது முதலமைச்சராகப் பார்க்கப்போகிறேன் என முதல் கேள்வி கேட்கிறார். அவருக்கு 85 வயது ஆகிவிட்டது.
மற்றவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் ஆசை இருக்கும்போது ஏன் எனக்கு வரக்கூடாதா? எனக்கு அந்த ஆசை வந்தால் காமெடியாம். மற்றவர்களுக்கு வந்தால் சீரியஸாம். நான் சீரியஸாகத் தான் சொல்கிறேன். என்னை ஒருநாள் கேட்டாங்க. சாக்லேட் பேபியா அல்லது ரக்டு பேபியானு?. அதுக்கு நான் சொன்னேன். நான் ரக்டாக தெரியுற சாக்லேட் பேபி என்று. மனசு சுத்தம். உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டிருப்பவன் நான். அதில் உழைப்பும் சேர்ந்து உள்ளது.
உழைப்பு, உறுதி, நியாயம், தர்மம் ஆகியவை சேர்ந்து இருக்கிறது. வெற்றி நிச்சயமாக வரும். சமத்துவ மக்கள் கட்சியின் சகோதரர்கள், இதுவரை வேலை செய்துவிட்டீர்கள். இனியும், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இதைவிட நீங்கள் கடுமையாக உழைத்தால் நம் இலக்கை அடையமுடியும்.
சரத்குமார் சொல்லிவிட்டார் நாளை மந்திரி ஆகிவிடுவார் என நினைக்காமல், ஆகிவிடுவோம் என நினையுங்கள். அதற்காக உழையுங்கள். உழைத்தால் தான் எதுவும் கிடைக்கும். நான் சைக்கிளில் சென்று பேப்பர் போட்டேன். சைக்கிள் கடையில் ஃபிட் அப் செஞ்சேன். டெலிவிஷன் ஷோரூம் வைத்தேன். மேலே இருந்து கீழே போனேன். முன்னேறினேன். எனக்கு நம்பிக்கை இருந்தது. மன தைரியம் இருந்தது. தன்னம்பிக்கை இருந்தது. உழைப்பு இருந்தது. உண்மை இருந்தது. அதனால் வெற்றி பெற்றேன்.
என்ன சோதனைகள் வந்தாலும் அதை தகர்த்து வெற்றி பெறவேண்டும். இது விழா மேடை மட்டும் அல்ல. விழா மேடையை விட்டு இறங்கியவுடன், டாஸ்மாக் கடைக்கு யாராவது சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர்கள் சென்றால் கட்சியை விட்டு தூக்கிவிடுவேன். இதில் நான் தெளிவாக இருக்கிறேன்" எனப் பேசினார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications