நீதிபதி பார்த்த சவுக்கு சங்கர் பேட்டி.. யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது தாமாக முன்வந்து வழக்கு
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. 'சவுக்கு' சங்கரை அவர் பேட்டி எடுத்தபோது, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசியதே இதற்குக் காரணம். இந்த நேர்காணலைப் பார்த்த நீதிபதி கே. குமரேஷ் பாபு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கில் பெலிக்ஸ் ஜெரால்டுவையும் சேர்த்து உத்தரவிட்டுள்ளார்.
பிரபல ஜி-ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு, யூடியூபர் 'சவுக்கு' சங்கர் தங்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் கூறி ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து செப்டம்பர் 2022-ல், அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

ஜூன் 2023-ல் இந்த உத்தரவில் சில மாற்றங்களைச் செய்த நீதிமன்றம், "சவுக்கு சங்கர் அந்த நிறுவனத்தைப் பற்றி ஏதேனும் கருத்துச் சொல்ல விரும்பினால், முதலில் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி 72 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் பதில் அளித்தால் அதையும் சேர்த்து வெளியிட வேண்டும்" என்று நிபந்தனையை சவுக்கு சங்கருக்கு விதித்தது.
ஆனால் 2024-ஆம் ஆண்டு பெலிக்ஸ் ஜெரால்டு நடத்திய ஒரு பேட்டியில், சவுக்கு சங்கர் இந்த 72 மணி நேர விதிமுறை குறித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் நேரலையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டால், அதற்குப் பதில் சொல்ல தான் 72 மணி நேரம் காத்திருக்க வேண்டுமா? என்று சங்கர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குத் தொகுப்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, "நீதிமன்ற உத்தரவை அப்படிப் புரிந்துகொள்ள முடியாது" என்பது போலக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்த நேர்காணலை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. குமரேஷ் பாபு, நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருக்கும்போது, அதைச் சிதைக்கும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகிய இருவரும் பேசியுள்ளதாகக் கருதினார்.
சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே அவமதிப்பு வழக்கு உள்ள நிலையில், அதற்குத் துணையாக இருந்த தொகுப்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தற்போது வழக்கு பாய்ந்துள்ளது. பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம இது குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு ஏப்ரல் 24, 2026 வரை கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications