கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம்
நெல்லை: கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாக்கில் நரம்பில்லாமல் பொய் பேசுகிறார் என தமிழக முதல்வர் ஸ்டாலின், நெல்லை பிரச்சாரத்தில் ஆவேசமாக பேசினார்.
திருநெல்வேலியில் நடந்த திமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "அதிமுகவை அமித் ஷாவிடம் அடகு வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தோல்வி பயத்தால் எல்லை மீறிப் பேசி வருகிறார். எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய தலைவர் கலைஞரை, நானே வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக நாக்கில் நரம்பின்றி அவர் உளறுவது கடும் கண்டனத்திற்குரியது.

முதலமைச்சர் என்ற முறையில் எனது செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவரான உங்களுக்கு முழு உரிமை உண்டு; மக்கள் அதைத் தேர்தலில் தீர்மானிப்பார்கள். ஆனால், முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை, யோக்கியதையும் இல்லை! அவர் ஒரு சிங்கம்; அவரை யாராலும் சிறைப்படுத்த முடியாது. மாறாக, அவரது இதயச் சிறையில்தான் நானும், இங்கே கூடியிருக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளும் குடியிருக்கிறோம்.
ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட ஒரு மாபெரும் தலைவன், 'அண்ணாவின் அருகில் உறங்க வேண்டும்' என்ற தனது கடைசி ஆசைக்காக, உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றபோது இரக்கமே இன்றி இடம் மறுத்தவர் நீங்கள். உங்களுக்குப் பதவி கொடுத்த சசிகலாவையும், கூடவே இருந்த ஓபிஎஸ், டிடிவி என அனைவரையும் முதுகில் குத்திய உங்களுக்குத் துரோகம் மட்டுமே வரலாறு.
நீங்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது; திமுகவை மீண்டும் அரியணையில் அமர்த்த மக்கள் எப்போதோ முடிவெடுத்துவிட்டார்கள்! மக்கள் தன்னை எப்போதோ புறக்கணித்துவிட்டார்கள் என்ற உண்மை தெரியாமல், 'பத்துதோல்வி பழனிசாமி' இன்றும் திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ளார். இந்தத் தேர்தலில் அவருக்கு '11-வது தோல்வி பழனிசாமி' என முத்திரை குத்த மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலின் 'சூப்பர் ஸ்டார்' என்பதை ஒரு சிறு குழந்தை கூடச் சொல்லும்!
இப்போது ஐபிஎல் சீசன் நடக்கிறது; மைதானத்தில் சிக்ஸர்கள் பறப்பதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? அதேபோலத்தான், எங்கள் தேர்தல் அறிக்கையிலும் சிக்ஸர்களைப் போலப் பாய்ந்து வரும் அதிரடித் திட்டங்களை அள்ளித் தெளித்திருக்கிறோம். எடப்பாடியின் பந்துகள் அனைத்தும் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறப்பது உறுதி!" என தெரிவித்திருந்தார்.
தருமபுரியில் அதிமுக வேட்பாளர் பாலக்கோடு அன்பழகனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் வெள்ளைக் குடையுடன் போனவர்தான் ஸ்டாலின். தற்போது இரட்டை வேடம் போடுகிறார்.
தமிழகம் முழுவதும் கஞ்சா, போதை புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. நாங்கள் அதிமுகவை விற்கவில்லை. நீங்கள்தான் காங்கிரஸ் கட்சியிடம் திமுகவை விற்பனை செய்துவிட்டீர்கள். காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியும் ஆ. ராசாவும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போதே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நம்மை பற்றி பேசலாமா?
கருணாநிதியின் இறுதி காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாகத்தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார் என ஒரு ஆடியோவில் தகவல் வந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications