நாங்குநேரி கொடூரம்.. சிறுவனுக்கு கை அறுவை சிகிச்சை.. விரையும் ஸ்டான்லி டாக்டர்கள்- மா சுப்பிரமணியன்
திருநெல்வேலி: சாதி பிரிவினையால் நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் சின்னத்துரைக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் நெல்லைக்கு விரைய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் அம்பிகா. இவரது மகன் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா செல்வி. சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி சென்ற சின்னத்துரை சில மாணவர்கள் அவரிடம் சாதிய பாகுபாட்டை காட்டி துன்புறுத்தினர். மேலும் சின்னத்துரையை படிக்க விடாமல் இடையூறு செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்தார்.
அரிவாள் வெட்டு: தாய் அம்பிகா கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் கூறினார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்தது. இந்த கோபத்தில் கடந்த 9 ம் தேதி இரவில் சில மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரையும், தடுக்க சென்ற தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டியது.
தீவிர சிகிச்சை: சின்னத்துரையின் உடலில் பல இடங்களில் வெட்டுகாயங்கள் உள்ளன. அதேபோல் சந்திரா செல்வியின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவருக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் விசிட்: இந்த சம்பவம் தொடர்பாக 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேனா பிடிக்க வேண்டிய வயதில் சக மாணவர்களை சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வியை அரிவாளால் வெட்டிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி உள்ளது. இந்நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை மற்றும் சந்திரா செல்வி ஆகியோரை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது சபாநாயகர் அப்பாவு உடனிருந்தார்.
கையில் ஆபரேஷன்: இவர்கள் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். அதன்பிறகு மா சுப்பிரமணியன் கூறியதாவது: சிறுவனுக்கு மிகச்சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு ஸ்டான்லி மருத்துவனை பொருத்தமாக இருக்கும் என தெரிவித்தனர். சிறுவனை இங்கிருந்து சென்னைக்கு அழைத்து செல்வதை காட்டிலும் அங்கிருந்து மருத்துவுர்கள் வந்து ஒருவாரமா அல்லது 10 நாட்களே தங்கி சிகிச்சை வழங்கலாம் என பேசப்பட்டுள்ளது.

ஓரிரு நாளில்: இந்த மருத்துவமனை முதல்வர் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜியிடம் பேசியுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் மருத்துவர்கள் வருவார்கள். கையேயே புதிதாக ஒட்டும் வகையிலான சிகிச்சையில் டாக்டர்கள் சாதனை புரிந்தவர்கள். இத்தகைய சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை என்பது அளிக்கப்பட உள்ளது.
அரசு வேலை: மேலும் முதல்வர் ஸ்டாலின் நீதியரசர் கே சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அதன் வழியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளார். சிறுவனின் தாயிடம் பேசி உள்ளோம். மனு அளித்துள்ளார். ஏதாவது அரசு வேலை வாய்ப்பு வழங்க கூறியுள்ளனர். சிறுவனுக்கு தற்போது 17 வயது தான் ஆகிறது. 18 வயது நிரம்பினால் தான் அரசு பணி செய்ய முடியும். இதனால் நிச்சயம் அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்படும். மக்கள் நல்வாழ்வு துறையில் ஏதாவது பணி வழங்குவோம். அவர்கள் குணமடைந்தவுன் நல்ல உறைவிட பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க கலெக்டர் கூறியுள்ளார். அவர்கள் கல்வி தொடரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்றார்.
முன்னதாக மாணவனின் சொந்த ஊர் மற்றும் அவன் படித்த பள்ளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சென்று விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அவர் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications