தொகுதி மாறுகிறேனா.. நெல்லை தொகுதியில் தான் போட்டியிடுவேன்.. உறுதியாக சொன்ன நயினார் நாகேந்திரன்!
நெல்லை: 2026 சட்டசபைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதி மக்கள் தங்கள் வீட்டுப்பிள்ளையாக என்னை நினைக்கிறார்கள் என்று கூறிய நயினார் நாகேந்திரன், 2001 முதல் 5 முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்து வருகிறார். அண்மையில் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியின் போது முதல்வர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்தார். என்ன நடந்தாலும், நெல்லை தொகுதியில் திமுக வெல்ல வேண்டும்.. அப்படி வெல்லவில்லை என்றால் திமுக நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று கூறினார்.

இதனால் திமுகவினர் நெல்லையில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர். அதேபோல் 2001 முதல் 2021 வரை நயினார் நாகேந்திரன் 5 முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் 2001, 2011 மற்றும் 2021 ஆகிய 3 சட்டசபைத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் வென்றுள்ளார். ஆனால் 2006 மற்றும் 2016 ஆகிய இரு சட்டசபைத் தேர்தலிலும், 2024 லோக்சபா தேர்தலிலும் நெல்லை தொகுதியில் தோல்வி அடைந்தார்.
நயினார் நாகேந்திரனுக்கு ஜோசியத்திலும் நம்பிக்கை உள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் இருந்து மாறப் போவதாக தகவல் வெளியானது. சாத்தூர் அல்லது நாங்குநேரி தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள்..
2001 முதல் 2021 வரை நெல்லை தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். நெல்லை தொகுதி மக்கள் என்னை ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள். நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத சூழலில், நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.
அதேபோல் பாஜகவுக்கு 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படுவதாக கேட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதில் அளித்தார். இதனால் நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதனால் 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் அடைந்த தோல்வியை 2026ல் மாற்றிக் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications