AC டிக்கெட் வாங்கிய முதியவர்.. சாதாரண பஸ்ஸில் ஏற்றி, படிக்கட்டில் சட்டை கிழிந்து.. கோர்ட் ஒரே போடு
நெல்லை: ஏசி பஸ்ஸுக்கு டிக்கெட்டை வாங்கி, சாதாரண பஸ்சில் பயணிம் செய்திருக்கிறார்.. இந்த விவகாரம் கடைசியில் கோர்ட் வரை சென்றுள்ள நிலையில், நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலைய சாலை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல்.. 64 வயதாகிறது..இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

அதாவது, நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு AC பஸ்சில் ரூ.61க்கு டிக்கெட் வாங்கி பயணம் செய்தார்... ஆனால், வாகைகுளம் அருகே அந்த பஸ் திடீரென ரிப்பேர் ஆகி நின்றுவிட்டது. இதனால், பஸ்சின் கண்டக்டரும், டிரைவரும், சண்முகவேலை அந்த வழியாக வந்த சாதாரண பஸ்சில் வற்புறுத்தி ஏற்றி அனுப்பி வைத்தனர்..
சீட் இல்லை: ஆனால், அந்த பஸ்சில் சண்முகவேலுக்கு உட்கார சீட் கிடைக்கவில்லை.. அத்துடன், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டிலேயே பயணித்து, கடும் அவதிக்கு ஆளானார். இதனால், அவரது சட்டை கிழிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சண்முகவேல் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நெல்லை வண்ணாரப்பேட்டை தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு விசாரணையும் நடந்து வந்தது.
இழப்பீடு: இந்த வழக்கை இன்று விசாரித்த நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், அரசு போக்குவரத்து கழக சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சண்முகவேலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டது. அதுமட்டுமல்ல, இந்த தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்கவில்லையானால், 6.5 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் கூறி நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications