நீங்க என்ன சொல்றது..நானே போறேன்! சுயமரியாதையே முக்கியம்.. திமுகவில் இருந்து நிரந்தரமாக விலகிய புள்ளி
நெல்லை : கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நெல்லை மேயர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் ராமகிருஷ்ணனை எதிர்த்து, போட்டியிட்டார் திமுக கவுன்சிலரான பவுல்ராஜ். இந்நிலையில் தனக்கு சுயமரியாதையே முக்கியம் எனவும், திமுகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார் பவுல்ராஜ்..
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான கல்பனா ஆனந்த குமாரும், நெல்லை மேயராக இருந்த சரவணனும் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் தங்கள் மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் பொறுப்பேற்றது தொடங்கி பதவியை விட்டு விலகும் வரை கவுன்சிலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உடல் நலம் மற்றும் சொந்த காரணங்களுக்காக கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். அதேபோல நெல்லை மேயராக இருந்த சரவணன் குடும்ப சூழல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். குறிப்பாக சரவணன் மீது ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக கவுன்சிலர்கள் கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்து நிலையில் மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியாமல் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் தங்கள் பகுதிகளில் பணிகள் முறையாக நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் தான் கல்பனாவும், சரவணனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து எப்போது மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் காலியாக உள்ள நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நெல்லை மேயர் தேர்தல் நடத்தப்பட்டது. நெல்லை மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 வார்டு கவுன்சிலர்கள் திமுக கூட்டணிக்கு உள்ளனர். இதை அடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேஎன் நேரு முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதை அடுத்து மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் கடைசி நேரத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலரான பவுல்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ராமகிருஷ்ணன் முப்பது வாக்குகள் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைமை உத்தரவிட்டதற்கு எதிராக பவுல்ராஜ்க்கு சில திமுக கவுன்சிலர்கள் வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பவுல்ராஜ் வேட்பு மனுவை திமுக கவுன்சிலர், மதிமுக கவுன்சிலரும் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 14 பேர் பவுல்ராஜ்க்கு வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கிட்டு ராமகிருஷ்ணன் மேயராக தேர்தெடுக்கப்பட்ட நிலையில், பவுல்ராஜ் சுயேட்சை கவுன்சிலர் போலவே இருந்து வந்தார். இந்நிலையில் திமுகவில் இருந்து தானே நிரந்தரமாக விலகுவதாக பவுல்ராஜ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்," பதவி ஏற்று சரியாக ஒரு வருடத்தில் 'விரைவில் ராஜினாமா" என்று என் முகநூல் பக்கத்தில் பதிவிடும் வகையில் நான் வார்டு சம்பந்தமாக கோரிக்கை வைத்த எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. எனவே எனது கோரிக்கைகள் போராட்டமாக மாறியது. அதனால் நான் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டேன்

மாமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த அப்போதைய மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் என்னை பின்வாங்க கேட்டுக்கொண்டபோது என்னை கட்சியில் சேர்த்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்தனர். அதை நம்பி நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க முயற்சித்த போது எங்கள் மாவட்ட பொறுப்புஅமைச்சரின் உதவியாளர் என்னை தவிர்த்து வந்தார்.
மன்னிப்பு கடிதம் கொடுத்தும் என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை, இருந்தாலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நம் கழக வெற்றிக்காக உழைத்தேன். எனக்கான அங்கீகாரம் மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டதால் என் அதிருப்தியை தெரியப்படுத்தவே மேயர் தேர்தலில் போட்டியிட்டேன். நான் மன்னிப்பு கடிதம் கொடுத்து சுமார் 9 மாதங்கள் ஆகியும் என் அதிருப்தியை தெரியப்படுத்த மேயர் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 2 மாதம் ஆகியும் என்னிடம் விளக்கம் கூட கேட்காத காரணத்தினால், தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு கற்றுத் தந்த தந்தை பெரியாரின் சுயமரியாதையே பெரிது என்று கருதி நான் வகித்த அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், நான் வகித்த பிற பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விலகிக் கொண்டு விடைபெறுகிறேன்" என அக்கடிதத்தில் கூறியுள்ளார். இது நெல்லை மாவட்ட திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications