Nellai kavin: கவின் காதலியிடம் சிபிசிஐடி விசாரணை.. சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு
திருநெல்வேலி: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கவின் காதலியின் தம்பியான சுர்ஜித்தை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடியினர் விசாரித்து வரும் நிலையில் கவினின் காதலியான சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சுர்ஜித்தின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்த நிலையில், மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). கவினும், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுபாஷினியும் பள்ளிப் பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். இவர்களது இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஐடி ஊழியரான கவின் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்காக வந்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக சுபாஷினி பணிபுரியும் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினை பேச வேண்டும் என்று அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. துணை காவல் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஸ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கவினின் காதலியான சுபாஷினியிடம் நேற்று முன்தினமும், நேற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சுபாஷினியிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையில் கவினை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்தது யார், அங்கிருந்து அழைத்துச் சென்றது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கொலை நடைபெற்ற இடத்தையும் சிபிசிஐடியினர் ஆய்வு செய்தனர். செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டன.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சுபாஷினியின் தம்பியான சுர்ஜித்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான மனு தாக்கல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
