"அம்மா போயிட்டு வரேன்! ஆசீர்வாதம் பண்ணு" தாய் இறந்த சோகத்திலும் +2 பொதுத்தேர்வு எழுதிய நெல்லை மாணவர்
திருநெல்வேலி: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாய் உயிரிழந்த நிலையில், அந்த சோகத்திலும் +2 தேர்வை எழுதிவிட்டுத் திரும்பியிருக்கிறார் நெல்லை மாணவர். தாயின் உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலில் விழுந்து ஆசி பெற்றுவிட்டு மாணவர் தேர்வு எழுதியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல் மாநிலம் முழுக்க +2 பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. இன்று மொழிப்பாடம் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இதற்காக மாநிலம் முழுக்க 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

நெல்லை மாணவர்
இன்றைய தினம் சுமார் 11,430 பேர் தேர்வு எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பேர் ஒரு பக்கம் தேர்வு எழுதாமல் விட்ட சூழலில், மற்றொருபுறம் தாய் உயிரிழந்த போதும் அந்த சோகத்தைத் தாண்டி மாணவர் ஒருவர் தேர்வு எழுதியிருக்கிறார். படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அந்த மாணவர் தேர்வு எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர் சுனில் குமார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி- தாய் சுபலட்சுமி. இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்துவிட்டார். தாய் சுபலட்சுமிக்கு இதய பாதிப்பு இருந்த போதிலும், அதையும் தாண்டி, அவர் தனது இரு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.
தாய் இறந்த துக்கம்
இந்தச் சூழலில் தான் +2 தேர்வுக்காக சுனில் குமார் தயாராகி வந்தார். இன்று காலை வழக்கம் போல சுனில், தேர்வுக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தார். இதற்கிடையே சுபலட்சுமி இன்று காலை எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் அவர்களின் வீட்டிற்கு வந்து, இறுதிச் சடங்கிற்குத் தயார் செய்தனர்.
தாயிடம் ஆசீர்வாதம்
இருப்பினும், தாய் இறந்த சோகத்திலும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாணவர் சுனில் குமார் இன்று தேர்வு எழுதியுள்ளார். வீட்டில் தாயின் உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், காலில் விழுந்து ஆசி பெற்றுவிட்டே சுனில் குமார் தேர்வு எழுதச் சென்று இருக்கிறார். தேர்வு முடிந்த பிறகே அவர் தனது தாய்க்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
+2 பொதுத்தேர்வு
இன்று மாநிலம் முழுக்க +2 பொதுத் தேர்வு நடந்த நிலையில், இதில் கலந்து கொள்ளத் தமிழகம் முழுக்க 8.21 லட்சம் பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமின்றி, தனித் தேர்வர்கள், சிறைவாசிகளும் கூட தேர்வு எழுதினர். மொத்தம் 4,24,023 மாணவிகள், 3,78,545 மாணவர்கள் 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர்.
தமிழகம் முழுக்க மாணவர்கள் தேர்வு எழுத ஏதுவாக 3,316 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் 45,000+ ஆசிரியர்கள், 4,800+ பறக்கும் படையினரும் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று நடந்த மொழிப்பாடம் ஈஸியாக இருந்ததாகவே மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து மார்ச் 6ம் தேதி ஆங்கில மொழி தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச் 25ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.












Click it and Unblock the Notifications