நெல்லைக்கே அல்வா.. ஆம்னி பஸ் பயணிகளிடம் நடந்த வித்தியாசமான வசூல் வேட்டை! என்ன நடந்தது பாருங்க?
நெல்லை: நெல்லையில் வண்ணாரப்பேட்டை ஆம்னி பஸ் நிறுத்தத்தில், பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி, பயணிகள் அமர்வதற்கு சேர்களை போட்டு பயணி ஒருவருக்கு ரூ.10 என்ற வகையில் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நின்று செல்கிறது. நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்குள் ஆம்னி பஸ்களுக்கு அனுமதி இல்லை என்பதால், நெல்லையில் இருந்து புறப்படும் பஸ்களும், நாகர்கோவிலில் இருந்து வரும் பஸ்களும் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நின்று செல்கின்றன.

இங்கிருந்து தான் ஆம்னி பஸ்களில் செல்லும் பயணிகள் பஸ்களில் ஏறுகின்றனர். பயணிகள் அமர்வதற்கு என ஒரே ஒரு நிழற்குடை அங்கு இருக்கிறது. ஆனால் அதில் 10 பயணிகள் கூட அமர முடியாது. மற்ற பயணிகள் அங்கு நின்றபடியே தான் செல்வார்கள். பஸ் வரும் வரை நின்றபடியே தான் பயணிகள் காத்திருந்து வருகிறார்கள். இதனால் பயணிகள் அமரும் வகையில் அங்கு இருக்கைகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
சாதாரண நாட்களிலேயே இப்படி என்றால், முகூர்த்த நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களின் போது சென்னை செல்பவர்கள், மற்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சமயத்தில் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இது போக மழை பெய்தாலும், வெயில் கொளுத்தினாலும் நின்றபடியே தான் செல்ல முடிகிறது என்று பயணிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் வண்ணாரப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் போதிய பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகளை வைத்து, அந்த இருக்கைகளில் அமரும் பயணிகள் ரூ.10 செலுத்தி அமர்ந்துகொள்ளலாம் என்று சேர்களை வரிசையாக போட்டு வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பயணிகள் கால் வலிக்குது என்று நினைத்தால் இந்த சேர்களில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று அங்குள்ள வாகன காப்பகத்தில் காவலாளியாக இருந்த நபர் பயணி ஒருவருக்கு ரூ.10 வாங்கி வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் நெல்லை வண்ணாரப்பேட்டை ஆம்னி பஸ் பேருந்து நிறுத்தத்தில், வரிசையாக சேர்கள் போடப்பட்டுள்ளன. அந்த சேர்களிலேயே ஒரு நபர் அமர்வதற்கு ரூ. 10 வாடகை மட்டுமே என்று ஒட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று அந்த இடத்தில் போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்கு ரூ.10 கட்டணம் என்றும், சேர்களில் ஒருவர் அமர்வதற்கு வாடகை ரூ.10 என்றும் எழுதப்பட்டுள்ளது. வாகன காப்பகத்தின் உரிமையாளர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணிகள் அமருவதற்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து கொடுக்காததை பயன்படுத்தி சிலர் பணம் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பயணிகளும் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications