நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட்
திருநெல்வேலி: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான பணிகளுக்கு பதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் ஒரு மகளிர் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 26ம் தேதி மாலையில் வழக்கம்போல் பெண் ஊழியர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காவல் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பு நின்றுள்ளார்கள்..

அவர்களில் ஒருவர் திடீரென அழகு நிலையத்துக்குள் சென்று, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் தர வேண்டும்" என்று கூறி ஆபாசமாக பேசி மிரட்டினார்களாம்.
தேர்தல் பணிக்கு வந்தவர்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர்கள் அழகு நிலையத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார்களாம். அந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்கள்.இதுகுறித்து ஊழியர்கள் அழகு நிலைய உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்தவர்கள் தேர்தல் பணிக்காக நெல்லை மாவட்டத்திற்கு வந்த பட்டாலியன் போலீசார் என்பதை கண்டறிந்தனர்
விசாரணை
போலீசார் இரண்டு காவலர்களையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 34), நெல்லை செந்தில்நகரைச் சேர்ந்த சேதுபதிராஜா (27) என்பதும், மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லை வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
காவலர்கள் கைது
பின்னர் காவலர்கள் மீது மகளிர் அழகு நிலையத்தில் அத்துமீறி நுழைதல், பெண்ணின் கண்ணியத்திற்கு பாதகம் விளைவித்தல், பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. போலீஸார் இரண்டு பேர் அழகு நிலையத்தை மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications