பேரிடரே இல்லைன்னு சொன்னாங்க.. இப்போது பாதிப்பை பார்க்க வருகிறார்கள்.. அமைச்சர் உதயநிதி சுளீர்
நெல்லை: மத்திய நிதி அமைச்சர் நாளை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருவது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முதலில் அவங்க பேரிடர் இல்லை என்று சொன்னாங்க.. ஆனால் இப்போது பாதிப்புகளை பார்ப்பதற்காக வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆறுகளில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தாலும், ஏரி, குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளினாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல் ஆடு மாடு கோழி உள்ளிட்ட உயிரினங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. இதேபோல் திருநெல்வேலியில் மட்டும் மழை வெள்ளத்தால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதேபோல், கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையினையும், நிவாரணப் பொருட்களையும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.
பேரிடர் இல்லை என்று சொன்னாங்க: அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் முதல்கட்டமாக மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினார். இதேபோல் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை இழந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நெல்லை வருவது குறித்து பேசினார். இது தொடர்பாக நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெல்லை மாவட்டத்திற்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
முதலில் அவங்க பேரிடர் இல்லை என்று சொன்னாங்க.. ஆனால் இப்போது பேரிடரை பார்ப்பதற்காக.. என்ன பாதிப்புகள் இருக்கிறது என்று பார்பதற்காக வராங்க.. கண்டிப்பாக நிதி கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இதேபோல் பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுடன் பேசியிருக்கிறார். அப்போது முதல்வர் ஸ்டாலினும் மோடியிடம் பாதிப்புகள் நிறைய ஏற்பட்டிருக்கிறது அதற்கு தகுந்த நிதியினை தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். நிதி அமைச்சர் பார்வையிட்ட பிறகு நிதி வழங்குவார்கள் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
தமிழக அரசு அறிக்கை: முன்னதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய நாட்களில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அதிக அளவுகளுக்கு மேல் தண்ணீர் வந்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழையானது திருநெல்வேலி, தூத்துக்குடி அதிகளவு பாதிப்புகள் ஏற்படுத்தியது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களையும், உயர்அதிகாரிகளையும் அனுப்பி வைத்து மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில், மீட்பு பணிகள் துரிதப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.5 லட்சம் இழப்பீடு: கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் 16 நபர்கள் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதமும், 67 மாடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.37,500/- வீதமும், 1064 வீடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.10,000/- வீதமும், 504 ஆடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.4000/- வீதமும், 135 கன்றுகள் இழந்தவர்களுக்கு தலா 5.20,000/- 28,392 கோழிகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.100/- வீதம் 2 கோடியே 87 இலட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இன்றையதினம், முதல் கட்டமாக நீரீல் மூழ்கி மற்றும் மின்சாரம் தாக்கி இறந்த 11 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதமும், வீடு இழந்த 5 நபர்களுக்கு தலா ரூ.10, 000/- வீதமும், மாடு, ஆடு, கோழி இழந்த 5 உரிமையாளர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு ரூ.58 இலட்சத்து 14 ஆயிரம் நிவாரணத்தொகையினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications