திருநெல்வேலியில் 'அந்த நிலம்' அரசு நிலமல்ல.. வக்பு நிலம்.. அப்பாவு பேச்சுக்கு எஸ்டிபிஐ விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்பு நிலத்தை போக்குவரத்துத்துறை அபகரிக்க முயலுவதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அந்த இடம் அரசு நிலம் என்று கூறும் சபாநாயகர் அப்பாவு அவர்களின் பேச்சு ஏற்புடையதல்ல என்பது மட்டுமின்றி, வக்பு நிலத்தை அபகரிக்கும் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது என்று எஸ்டிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள 1.25 ஏக்கர் அளவுள்ள அரசு போக்குவரத்து கழகம் அமைந்துள்ள இடம் முகைதீன் காதர் சாகிப் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமானது. 1993 ஆம் ஆண்டு 10 வருட குத்தகை அடிப்படையில் அப்போதைய கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்தின் பயன்பாட்டுக்கு அந்த நிலம் ஜமாத் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டது.

ஆனால், 2001 ஆம் ஆண்டு முதல் அந்த இடத்திற்கான வாடகையை போக்குவரத்து கழகம் தராத காரணத்தால் நீதிமன்றம் மூலமாக அந்த இடத்தை காலி செய்து கொடுக்க உத்தரவு பெறப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும் உயர் நீதிமன்றம் இடத்தை காலி செய்து ஜமாத் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனாலும் அந்த இடத்தை காலி செய்யாமலும், வாடகை தராமலும் போக்குவரத்து கழகம் பயன்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் அந்த இடம் தொடர்பாக பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவுமான அப்பாவு அவர்கள், குறிப்பிட்ட அந்த இடம் தனிநபருக்கு சொந்தமான இடம் என்றும், அரசு புறம்போக்கு நிலம் என்றும் அதனால் போக்குவரத்து கழகம் அதனை காலி செய்யாது என முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அந்த இடத்திற்கு பாத்தியப்பட்ட ஜமாத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்த இடம் முகைதீன் காதர் சாஹிப் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்பு இடம் என்பது ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமின்றி, நீதிமன்ற வழக்கின் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சபாநாயகர் அப்பாவு அவர்களின் பேச்சு ஏற்புடையதல்ல என்பது மட்டுமின்றி, வக்பு நிலத்தை அபகரிக்கும் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. இதனை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
வக்பு நிலங்களை அபாகரிக்கும் நோக்கம் கொண்ட ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு, மறுபுறம் வக்பு நிலங்களை அரசு நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகளிலும் திமுக அரசு ஈடுபட்டு வருகின்றது. சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திடம் காட்டும் திமுக அரசின் இத்தகைய இரட்டைநிலை கண்டனத்திற்குரியது.
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான அரசு நாங்கள் தான் எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, தமிழகத்தில் ஏராளமான இடங்களில் இதுபோன்ற வக்பு சொத்து பிரச்சனைகளில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானதாகவே செயல்பட்டு வருகின்றது. ஆவணங்களின் அடிப்படையிலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் சிறுபான்மை சமூகத்திடம் சொத்துக்களை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள திமுக அரசு, இதுபோன்று நடந்து கொண்டால் நாங்கள் தான் சிறுபான்மை பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது.
ஆகவே, திசையன்விளையில் உள்ள 1.25 ஏக்கர் அளவுள்ள அரசு போக்குவரத்து கழகம் அமைந்துள்ள முகைதீன் காதர் சாகிப் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக காலி செய்து ஜமாத் நிர்வாகத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வரை ஜமாத் நிர்வாகத்திற்கு எஸ்டிபிஐ கட்சி உறுதுணையாக நிற்கும் என்பதோடு, போராட்டத்தையும் முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications