திமுக வென்றால்தான் கடைக்கோடி மனிதருக்கும் திட்டங்கள் செல்லும்! முதல்வர் ஸ்டாலின் இறுதிகட்ட பரப்புரை
திருநெல்வேலி: ‛‛அதிமுகவிடம் சாதனைக்கு பதில் வேதனை தான் உள்ளது. நாடாளுமன்ற, சட்டசமன்ற தேர்தல் போன்று நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுக்கு அடி கிடைக்கும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 90 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்டாலின் பிரசாரம்
இன்று மாலை திருநெல்வேலி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்தது. திமுக தான் பெட்ரோல், டீசல் விலையை முதன்முதலில் குறைத்தது. 10 ஆண்டுகளாக தமிழகத்தை பாழாக்கிய அதிமுக இப்போது திமுகவை குறைகூறுகிறது.
சம்பா பயிர்களுக்கு இழப்பீடு, மகளிர் சுயஉதவிக்குழு கடன், நெசவாளர்களுக்கு பஞ்சுக்கு ஒரு சதவீத நுழைவு வரி ரத்து செய்துள்ளோம். ரூ.2 ஆயிரம் கோடி மகளிர் சுயஉதவி குழு கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை பழனிசாமி ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

நாடக கம்பெனி
தமிழகத்தை 10 ஆண்டுகளாக பழனிசாமி, பன்னீர்செல்வம் நாடக கம்பெனி சீரழித்தது. திமுக செயல்படுத்திய திட்டங்களில் மகளிருக்கு நகர பஸ்களில் இலவசம் என்ற திட்டம் தான் எனது மனதுக்கு நெருக்கமானது. வெறுமனே திட்டத்தை அறிவித்து கோட்டையில் இருப்பவன் நான் அல்ல. திட்டங்கள் குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்வேன். மக்கள் நலனை காக்கும் அரசு திமுக. மக்களுக்காக நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக அரசின் செயல்பாட்டால் தள்ளுபடி தாமதமானது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வங்கியில் 500 நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் நகை இல்லை. இதற்கு ரூ.1 கோடியே 90 லட்சம் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

கடன் தள்ளுபடி
இன்னொரு இடத்தில் ஒரு நபர் 5 சவரன் அடிப்படையில் 625 நகை கடன் பெற்று ரூ.1.25 கோடியும், இன்னொருவர் 647 கடன்கள் மூலம் 1.47 கோடி கடன் பெற்றுள்ளார். இன்னொருவர் ரூ.7 கோடிக்கு கடன் வாங்கியுள்ளார். போலி நகைகளுக்க கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் திட்டம் உரியவருக்கு சென்று சேர வேண்டும் என்பதில் திமுக அரசு தெளிவாக உள்ளது. கூட்டுறவில் மோசடி செய்தவர்களை பிரித்தெடுத்து விட்டோம். கடன் தள்ளுபடி திட்டத்தில் 13 லட்சம் குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.

ஊழல்கள்
நெடுஞ்சாலை டெண்டர் ஊழலில் பழனிசாமி, சொத்துக்குவிப்பில் பன்னீர்செல்வம், உள்ளாட்சி ஊழல் ஆட்சியாக வேலுமணி, தனியார் மின்சாரம், தரமற்ற நிலக்கரி கொள்முதல் தங்கமணி, குட்கா முதல் கொரோனா வரை கொள்ளை டாக்டர் விஜயபாஸ்கர், பருப்பு முறைகேடு காமராஜ், வேலை மோசடி ராஜேந்திரபாலாஜி, பத்திரபதிவு விதிமீறலில் வீரமணி, கனிமவளம் கொள்ளை சண்முகம் என அனைவரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தேர்தலில் தண்டனை கிடைத்தது.

சட்டியில் இருந்தால்தானே
2011, 2016 தேர்தல் அறிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையை பழனிசாமி எடுத்து பார்க்க வேண்டும். அதன்பிறகு திமுகவை குற்றம்சாட்ட வேண்டும். அதிமுக சாதனையை கூறி வாக்கு கேட்க முடியுமா. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். சாதனைக்கு பதில் அவர்களிடம் வேதனை தான் உள்ளது. இதை மறைக்கவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலில் வாங்கிய அடியை தான், நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பெற உள்ளது. இது பழனிசாமிக்கும் நன்கு தெரியும். தொடர் தோல்வி விரக்தியில் அவர் உளறுகிறார். இவருக்கு வாக்களிக்க கூடாது. தமிழகத்தில் மொத்தம் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 8288 பேரூராட்சி உறுப்பினர்கள், 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள் ஒரே கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக, நமது கூட்டணி வேட்பாளர்கள் தான் வெற்றி பெற வேண்டும். அதுதான் மகத்தானது. அப்போது தான் கடைக்கோடி மனிதருக்கும் திட்டங்கள் செல்லும். முறையாக திட்டங்கள் சென்று சேரும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் கைகளில் தான் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் என எண்ணி அதிமுக பெண்டிங் வைத்தது. உள்ளாட்சியில் திமுகவின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் உண்மையாக உழைப்பார்கள். மக்களின் கூப்பிட்ட குரலுக்கு வருவார்கள். தாங்கும் நிலம், காக்கும் அரணாக இருப்பார்கள். மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து கண்காணிப்பேன். இதனால் திமுக, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications