பல்லை பிடுங்கி, உயிர்நாடியில் தாக்கி.. என்ன மனநிலை? பல்வீர் சிங்கின் பவரை புடுங்குங்க.. ராமதாஸ்
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கியுமிருக்கிறார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். இது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவத்துள்ளார்.
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு 10 இளைஞர்கள் சிறு குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் பற்களை தட்டி உடைத்தும் விதைகளை நசுக்கியும் குரூர சித்ரவதை செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது புகார் எழுந்துள்ளது.
அம்பாசமுத்திரம், சிவந்திபுரம் மாயாண்டி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில் ஒருவர் கூறுகையில், தனது நண்பர் பிரச்னையில் தட்டிக்கேட்டபோது, ஏற்பட்ட பிரச்னையில் காவல் நிலையத்தில் தன்னையும் தனது சகோதரர்களையும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

வீடியோவால் கொதிப்பு
அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்க் ஜல்லி கற்களை வாயில் வைத்து தேய்த்து சித்திரவதை செய்ததோடு, பற்களைத் தட்டி உடைத்து பிடுங்கினார் மேலும், பல்வீர் சிங்க் தங்களைக் கொடூரமாகத் தாக்கினார் என்றார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்து பலரும் கொதித்து போனார்கள். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

விசாரணை வளையம்
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உதவி ஆட்சியர் முகமது சபீரை விசாரணை அதிகாரியாக நியமித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரனைக்கு வளையத்துக்குள் பல்வீர் சிங் வந்துள்ளதால் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

கண்டிக்கத்தக்கது
இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கியுமிருக்கிறார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். இது கண்டிக்கத்தக்கது

உயிர்நாடி
குற்றம் செய்தவர்களை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார். ஒருவர் புதிதாக திருமணமானவர் என்று கூறியதால், அவரை உயிர்நாடியில் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். தாக்கப்பட்டவர்கள் அதற்காக மருத்துவம் பெறுகின்றனர்; உடல்களில் தழும்புகள் உள்ளன!

பாதுகாப்பு இல்லை
விசாரணை என்ற பெயரில் பல்வீர்சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவர். பல்வீர்சிங் போன்ற மனநிலை கொண்டவர்கள் காவல்துறை உயர்பதவிகளில் இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது!

சிறையில் அடைக்கனும்
உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications