நெல்லை கலெக்டர் ஆபீஸில் நல்லபாம்பு.. அடுத்து அம்மன் கோயில் கருவறைக்குள் 5 அடி.. ஒரே நாளில் இப்படியா
நெல்லை: ஒரே நாளில் 2 இடங்களில் நல்லபாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதில் ஒன்று நெல்லை கலெக்டர் ஆபீஸ் வளாகம்.. இன்னொன்று திருவாடானை அம்மன் கோவில் கருவறை.. ஒரு இடத்தில் போலீசார் பாம்பை கவனித்த நிலையில், இன்னொரு இடத்தில் கருவறைக்குள்ளேயே பாம்பை பார்த்து பூசாரி பதறியுள்ளார்.. அப்பறம் என்ன நடந்தது தெரியுமா?
நெல்லை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் கொக்கிரக்குளத்தில் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மனு கொடுக்க வந்து செல்கிறார்கள்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஆபீஸ்
மேலும், பொதுமக்கள் போராட்டம் நடத்துவது, தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற சம்பவங்கள் நடப்பதால், பாதுகாப்புக்காக பகல் முழுவதும் நுழைவுவாயில் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பது வழக்கமாகும்..
அப்படித்தான் நேற்று போலீசார் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். அப்போது நுழைவுவாயில் அருகே இருக்கும் தண்ணீர் டேங்க் பக்கத்தில் சிறிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை போலீசார் கவனித்துள்ளனர்.
கல்லுக்கு அடியில் நல்ல பாம்பு
பாம்பை பார்த்ததும் உஷாரான போலீசார், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் அங்கு தேடியபோது, பெரிய கல்லுக்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது.
பிறகு தீயணைப்பு வீரர்கள் லாவகமாக செயல்பட்டு, கல்லுக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது கொடிய விஷமுள்ள நல்லபாம்பு என்பது தெரியவந்தது. இதனால் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
இதே நாளில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பிடாரி அம்மன் கோவிலில் திருவிழா வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி அம்மனுக்கு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
5 அடி நீளமுள்ள விஷம்
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், சுமார் 5 அடி நீளமுள்ள விஷம் கொண்ட நல்லபாம்பு ஒன்று திடீரென கோவில் கருவறைக்குள்ளேயே புகுந்துள்ளது.... திடீரென கருவறைக்குள் பாம்பு நடமாடுவதை பார்த்த கோவில் பூசாரி கடும் அதிர்ச்சி அடைந்தார். ஒரு நிமிடம் வெலவெலத்து போன அவர், பதற்றமடைந்து உடனடியாக கருவறையை விட்டு வெளியேறினார்.. அத்துடன் அங்கிருந்த பக்தர்களையும் எச்சரித்தார். .
கருவறைக்குள் நல்லபாம்பு இருப்பது தெரிந்ததுமே, பக்தர்களும் பொதுமக்களும் பதறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதடிற ஓடியுள்ளனர். இதையடுத்து திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கருவறைக்குள் பதுங்கியிருந்த பாம்பை பிடிக்க அவர்கள் நீண்ட நேரம் போராடினர். இறுதியில் பாம்பை லாவகமாக பிடித்தனர். எந்தவித காயமும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்ட அந்த நல்லபாம்பு, பின்னர் அருகில் இருந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அதை பாதுகாப்பாக விட்டனர்.
கருவறைக்குள் பாம்பு
தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. ஒருவேளை பூசாரி அந்த நல்லபாம்பை சரியான நேரத்தில் கவனிக்காமல் இருந்திருந்தால், கருவறைக்குள் சென்ற பக்தர்களுக்கு என்ன ஆகியிருக்குமோ? கோவில் திருவிழா நேரம் என்பதால், பெரிய அசம்பாவிதமே நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்..
ஒருவழியாக பாம்பை பிடித்த பிறகே, கோவில் பகுதியில் மீண்டும் அமைதி திரும்பியது.. ஒரே நாளில் ஒரு கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலும், இன்னொரு பக்கம் அம்மன் கோவில் கருவறையிலும் நல்லபாம்பு புகுந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது..!!!




Click it and Unblock the Notifications
