திருநெல்வேலியில் விழுந்த பச்சைக்கிளி.. நெல்லை கலெக்டர் ஆபீஸில் ஒரே மகிழ்ச்சி! சபாஷ் பாலசுப்பிரமணியன்
திருநெல்வேலி: நெல்லையில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் போலீஸ்காரர் பாலசுப்பிரமணியத்துக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
தற்போது வெயில் அதிகரித்து காணப்படுகிறது.. இந்த வெயிலுக்கு தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. தொடர்ந்து உயிரிழப்புகளும் நடந்து கலக்கத்தை தந்து வருகிறது.
கடும் வெயில்: அதுவும், இப்போது கத்திரி வெயில் துவங்கிவிட்டதால், பகல் நேரங்களில் வெளியே வரவே முடிவதில்லை.. அந்தவகையில், நெல்லையிலும், வெயில் வாட்டி எடுத்து வருகிறது.. 106 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்றுகூட 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது.

எனவே, வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் நிறைய அட்வைஸ்களை தந்துவருகிறது.. பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.. ஆங்காங்கே நீர்மோர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது..
பச்சைக்கிளி: இந்நிலையில், நேற்றைய தினம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயல் பகுதியில், ஒரு பச்சைக்கிளி பறந்துவந்து தரையில் விழுந்தது.. வெயிலுக்கு பறக்க முடியாமல், வெயிலில் சுருண்டு, பச்சைக்கிளி மயங்கி விழுந்துவிட்டது..
கலெக்டர் அலுவலகம் வாசலில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் இந்த கிளியை பார்த்து பதறிவிட்டார்.. உடனே ஓடிவந்து, அந்த கிளியை எடுத்து சென்று, அங்குள்ள குடிநீர் தொட்டியின் மீது வைத்தார்.. சிறிது தண்ணீர் எடுத்து கிளி மீது தெளித்தார்... பருகுவதற்கு தண்ணீரும் கொடுத்தார்..
இதையடுத்து அந்த கிளி மெல்ல கண் விழித்தது.. சிறிது நேரம் தண்ணீர் தொட்டி மீது உட்கார்ந்திருந்தது.. தன்னை மெல்ல மெல்ல ஆசுவாசப்படுத்தி கொண்டது. அப்போது, பொரிகடலையை எடுத்து வந்து அங்கிருந்த போலீசார் தந்தார்கள்.. அதையும் ஆறஅமர பச்சைக்கிளி சாப்பிட்டது.. பிறகு, ஓரளவு தெம்பி கிடைத்ததுமே, அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது..
பாராட்டு: வெயிலில் மயங்கிய பச்சைக்கிளிக்கு தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய இந்த சம்பவத்தை பார்த்து, கலெக்டர் ஆபீசுக்கு வந்திருந்தவர்கள் அனைவருமே நெகிழ்ச்சியடைந்தனர்.. கிளி பறந்துபோவதை பார்த்துமே, எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர்.. பாசக்கார போலீஸ்காரர் பாலசுப்பிரமணியனுக்கும் பாராட்டை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications