திருநெல்வேலியில் அரசு ஊழியரிடம் ஒரே பிளானில் 8 லட்சம் சம்பாதித்த பெண்..5 வருடத்திற்கு பின் ட்விஸ்ட்
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கீழநத்தம் பஞ்சாயத்து மீனாட்சிசுந்தரம் நகரை சேர்ந்த தாசன் என்பவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெல்லை மண்டல முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு 70 வயது ஆகிறது. இவர் தனது மகள்களை ஐந்து வருடம் முன்பு அரசு வேலைக்கு சேர்க்க முயற்சித்துள்ளார். அவரிடம் 8 லட்சம் மோசடி செய்த பெண், ஐந்து வருடங்கள் கழித்து போலீசிடம் சிக்கியுள்ளார்.
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரை நம்பி மக்கள் ஏமாறுவது அதிகமாக நடக்கிறது. அவருக்கு நான் தான் வேலை வாங்கி தந்தேன்..இவருக்கு நான் தான் வேலை வாங்கித்தேன். எனக்கு அவரை தெரியும்.. எனக்கு இவரை தெரியும் என்று கவர்ச்சியமாக பேசுபவர்களின் வலையில் விழுபவர்கள் கடைசியில் போகும் இடம் போலீஸ் ஸ்டேஷன்..

அதேபோல் ஏமாற்றுபவர்கள் முழு பணத்தையோ அல்லது பாதி பணத்தை ஏப்பம் விட்ட பின்னரே சிக்குகிறார்கள்.. அவர்கள் கடைசியில் ஜெயிலில் சில மாதங்கள் இருந்துவிட்டு பெயிலில் வந்து மறுபடியும் வேறு ஊரில் ஏமாற்றுவதை தொடர்கிறார்கள்.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.. ஒருவருக்கு எது பலவீனமோ, அதனை பயன்படுத்தி ஏமாற்றுவது என்பது பல ஆண்டுகளாக தொடர்கிறது. திருநெல்வேலியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் பஞ்சாயத்து மீனாட்சிசுந்தரம் நகரை சேர்ந்த 70 வயதாகும் தாசன் என்பவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெல்லை மண்டல முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பணியில் இருந்த காலக்கட்டத்தில் பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்த பெனிட்டா (34) என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார்.. அப்போது அவருக்கு, உங்களது மகள்களுக்கு மத்திய அரசில் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய தாசன் 2 தவணைகளாக மொத்தம் ரூ.8 லட்சத்தை பெனிட்டாவிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் அவர் சொன்னது போல் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு தாசன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பெனிட்டா தலைமறைவானதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுதொடர்பான வழக்கு நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, தலைமறைவான பெனிட்டாவை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து திருநெல்வேலி பாளையங்கோட்டை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று முன்தினம் பெனிட்டாவை கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications