நாங்குநேரி தொகுதியை குறி வைத்த டிடிவி தினகரன்.. தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தும் அமமுக!
நெல்லை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கடந்த சட்டசபைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் அமமுக 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை கைப்பற்றிய சூழலில், அமமுகவுக்கு செல்வாக்கான தொகுதியில் போட்டியிடும் என்று டிடிவி தினகரனும் உறுதி செய்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குள் அமமுக இணைந்துவிட்டது. இதனால் பாமக, பாஜக, அமமுக ஆகிய 3 பெரிய கட்சிகள் இருப்பதால், அதிமுகவின் தொகுதி பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் அமமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆர்வமாக உள்ளன.

ஏற்கனவே டிடிவி தினகரன் தரப்பில் சட்டசபைத் தேர்தல் மற்றும் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டார். இருந்தாலும் ஆண்டிபட்டி தொகுதியில் தன்னுடைய ஆதரவாளரை நிற்க வைக்க டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். அதேபோல் தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று அமமுகவினர் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டே டிடிவி தினகரன் ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து அமமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறார். அதேபோல் போட்டியிடக் கூடிய தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் டிடிவி தினகரன் பேசுகையில், தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் சுமூகமான முறையில் ஆலோசித்து தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எந்தவித பிரச்சனை இல்லாமல் தொகுதிப் பங்கீடு நடைபெறும். எங்களை பொறுத்தவரை திமுக ஆட்சியை வீழ்த்துவதே முதல் இலக்கு.
தென் மாவட்டங்களில் அமமுக ஒரு மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும். கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே நாங்குநேரி தொகுதியில் எங்கள் வேட்பாளர் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இது அமமுகவிற்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளில் ஒன்று. அதனால், இங்கு தகுதியான வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications