கோவை சூலூரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை! இன்று தீர்ப்பு!
கோவை: கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் கோவை போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கடந்த மே 21 ஆம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் திடீரென காணவில்லை. இதையடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில் கண்ணம்பாளையம் செல்லும் வழியில் குளக்கரை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மே 22 ஆம் தேதி இரவு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோரும், உறவினர்களும் சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சூலூர் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அதிரடி படை போலீஸார் குவிக்கப்பட்டனர். கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி, டிஐஜி சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேச்சுவாரத்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்தி என்ற 33 வயது இளைஞர் சிறுமியை தனது பைக்கில் அழைத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து 23 ஆம் தேதி காலை அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த கார்த்தியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதற்கு அவரது நண்பர் மோகன்ராஜ் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 21 நாட்களில் 39 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக போலீஸிடம் இருந்து தப்ப முயன்ற போது கார்த்திக் கீழே விழுந்ததால் அவருக்கு வது கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவை போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றவாளி கார்த்திக்கு மரண தண்டனை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications
