முதல்வரை வீடு தேடி சென்று சந்தித்த காங்கிரஸ் எம்.பி... எதற்காக இந்த சந்திப்பு?
சென்னை: திருவள்ளூர் மக்களவை தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவருமான ஜெயக்குமார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீடு தேடிச் சென்று சந்தித்து நன்றி கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லுரி அமைக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும், மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நிதியை ஒதுக்கியதற்காகவும் அந்த தொகுதி எம்.பி. என்கிற அடிப்படையில் ஜெயக்குமார் முதல்வரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் திமுக கூட்டணி குறித்தும், நடப்பு அரசியல் பற்றியும் ஜெயக்குமார் முதல்வருடன் பேசியதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் அதன் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கவனத்திற்கு வராமலே பல நிகழ்வுகள் அரங்கேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சரை ஜெயக்குமார் எம்.பி. சந்தித்து நன்றி தெரிவிக்கும் தகவல் கடைசி நேரத்தில் தான் அழகிரிக்கே தெரியவந்துள்ளது. இதனால் பாவம் மனிதர் நொந்துகொண்டாராம். கே.எஸ்.அழகிரியை மதிக்காத தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் என ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதையொட்டியே தான் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. திருவள்ளூர் மருத்துவக்கல்லூரிக்கு ரூ.321 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயக்குமார் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கும், ஜெயக்குமார் எம்.பி.க்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். ஜெயக்குமார் மீது ஏற்கனவே திமுகவினர் பலமுறை புகார் கூறியுள்ள நிலையில், இந்த சந்திப்பு அவர்களை மேலும் கோபம் அடையச் செய்துள்ளது. இவரை வெற்றிபெற வைக்க இரவு பகல் பாராது பணத்தை செலவழித்து நாங்கள் உழைத்தால், அவரை தோற்கடிக்க துடியாய் துடித்த கட்சிக்கு சென்று நன்றி கூறுகிறார் என உ.பி.க்கள் ஆவேசம் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications