சரக்கிற்கு சைட் டிஷ் தீர்ந்து போச்சு.. வாங்கி வர மறுத்த ரவுடியை கொன்ற 3 நண்பர்கள்! பின்னணி என்ன?
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் மதுவுக்கு சைட் டிஷ் வாங்கித் தராத நண்பரை 3 இளைஞர்கள் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் செவ்வாப்பேட்டை அருகே தொட்டிகலை கிராமத்தில் பிரபல ரவுடி வேலு. இவர் தனது நண்பர்களான செல்வம் (எ) செல்வா, தனுஷ் (எ)ஸ்டாலின், கோகுல் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் வாங்கி வைத்த சைட் டிஷ் காலியாகிவிட்டது. இதனால் வேலுவை சைட் டிஷ் வாங்கித் தருமாறு மற்ற 3 பேரும் கேட்டுள்ளனர். இதற்கு வேலு மறுத்துள்ளார்.

காசு இல்லை
தன்னிடம் காசு இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூவரும் வேலுவை தரக்குறைவாக பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலு பதிலுக்கு அவர்களை அசிங்கமாக பேசினாராம். ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் வாய்த் தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது.

வேலு மீது தாக்குதல்
மூன்று பேரும் சேர்ந்து வேலுவை தாக்கியுள்ளனர். பதிலுக்கு தன்னால் இயன்ற வரை வேலுவும் போராடி பார்த்துள்ளார். பிறகு மூவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் கையில் வைத்திருந்த கத்தியால் வேலுவை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றினர்.

மூன்று பேரை தேடும் காவல் துறை
பின்னர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மூன்று பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். கொல்லப்பட்ட வேலு மீது ஏற்கெனவே வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இரு கொலைகளை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் திருந்தி வாழ முடிவு எடுத்து வெல்டிங் வேலை செய்தார்.

விசாரணை
இந்த நிலையில் இவர் கொல்லப்பட்டிருப்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் சைட் டிஷ் வாங்காததால் கொன்றார்களா, இல்லை திருந்தி வாழ்ந்து வருவதால் கொன்றார்களா, இல்லை ஏதேனும் முன் விரோதம் இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்துகிறார்கள். கொலை செய்த மூவரில் செல்வம் என்பவர் ரவுடிகள் தன்னை கொலை செய்யக் கூடும் என்பதால் எங்கு போனாலும் கத்தியுடன்தான் செல்வாராம். சைட் டிஷ்ஷுக்காக திருந்தி வாழ்ந்து வந்தவரை கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications