8 வயது சிறுமி பலாத்காரம்.. 8 நாட்களுக்கு பின் இளைஞரின் புகைப்படம் வெளியீடு.. கொடூரனை தேடும் போலீஸ்!
திருவள்ளூர்: பள்ளி முடித்து பாட்டி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த 8 வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குற்றவாளியை கைது செய்யக்கோரி குடும்பத்தினரும், உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி அரசு உதவி பெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜூலை 12ஆம் தேதியன்று பள்ளி முடிந்து நண்பகலில் தனது பாட்டி வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து, சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து தப்பித்து உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியின் நிலைமையைப் பார்த்த பெற்றோர், அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளனர். இதன்பின் போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி நேரடியாகச் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சிறுமியின் தாய் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் பேசியது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் முகம், வாயெல்லாம் ரத்தம் வரும் அளவிற்கு அந்த இளைஞர் அடித்திருந்ததும் தெரிய வந்தது.
இதனிடையே குற்றவாளி சிறுமியை பின் தொடர்ந்து சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியது. ஆனால் ஆதம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளியைக் கண்டறிவதில் காவல்துறைக்கு சவால் இருந்தது வந்தது. இந்த நிலையில் 8 நாட்களுக்குப் பின் இளைஞரின் தெளிவான புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே சிறுமி அளித்த வாக்குமூலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் இந்தியில் பேசியதாகக் கூறி இருந்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஏற்கனவே தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவர் மூலமாக ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரை மருத்துவர்கள் கூடுதலாகக் கண்காணித்து வருகின்றனர். இதனால் விரைவில் சிறுமி சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைக் கைது செய்ய வலியுறுத்தி ஆதம்பாக்கம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications