"நெகிழ்ச்சி".. மண்ணில் வடமாநில தொழிலாளர்கள் புதைவதை பார்த்ததுமே.. பதறியடித்து மீட்ட தமிழர்கள்.. வாவ்
சென்னை அருகே மண் சரிவில் பீகார் மாநில தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர்: சென்னை அருகே கால்வாய் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு பீகார் மாநில தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் 15 மண்டலங்களில் முதன்மையானது திருவொற்றியூர். இந்த திருவொற்றியூருக்கு அருகில்தான் எண்ணூர் அமைந்திருக்கிறது. எண்ணூரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்றும் தாழங்குப்பம் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியில் பீகார் மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நண்பகல் சுமார் 1 மணியளவில் கால்வாயில் தோண்டப்பட்டிருந்த மண் சரிந்து விழுந்துள்ளது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாதாரண மண் தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர். ஆனால் இதன் பின்னர்தான் மண்சரிவில் இரண்டு பேர் சிக்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனடியாக இதில் சிக்கியிருந்த வடமாநில தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே சிக்கியவர்களை பயப்படாமல் இருக்க தண்ணீர் கொடுத்து உள்ளூர் மக்கள் ஆசுவாசப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அவர்களால் மீட்க முடியவில்லை. எனவே சக வடமாநில தொழிலாளர்களுடன் சேர்ந்த மீட்க முயன்றுள்ளனர். இம்முயற்சியும் பலனளிக்காததால் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் மண்சரிவில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களும் வலியில் துடித்துள்ளனர். காவல்துறையினராலும் அவர்களை மீட்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு தொழிலாளர்களையும் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டிருக்கின்றனர். இதில் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு லேசான காயம்தான் ஏற்பட்டிருப்பதால் அவர் 'ஸ்டான்லி' அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கால்வாய் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையின் கூறியுள்ளனர். ஏற்கெனே வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான விஷயத்தில் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications