கடன் மானியமாக 50000 தந்த மத்திய அரசு.. அதை வாங்க லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி.. தேடி வந்த ஆப்பு
திருவள்ளூர்: மத்திய அரசால் வழங்கப்படும் கடன் உதவி திட்டத்தில் மானியம் பெறுவதற்கு ரூ.2500 லஞ்சம் கேட்ட புகாரில் திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 'பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' என்ற திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை அரசு கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த கடனில் 35 சதவிகிதம்வரை அரசு மானியம் வழங்குகிறது.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொடக்க நிலையில் உதவி செய்வதற்காக 10 லட்சம் வரையிலும், சில வகை நிறுவனங்களுக்கு 50 லட்சம் வரையிலும் மானியம் வழங்குகிறது. இது தவிர, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசே பங்கு மூலதனம் அளிக்கிறது.
பொதுவாக மத்திய மாநில அரசுகள் வாங்கும் கடன் தொடர்பான உதவிகளை பெற மாவட்ட தொழில் மையத்தை நாட வேண்டியதிருக்கும். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு குறு தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கும் பணிகள் நடக்கிறது.
இந்நிலையில் திருவள்ளூர் ஈக்காடு பகுதியில் புத்தக கடை நடத்தி வரும் 47 வயதாகும் குமாரசாமி, புத்தக கடையை விரிவுப்படுத்த கடந்த 2022ஆம் ஆண்டு மாவட்ட தொழில் மையத்தை அணுகி ரூ.5 லட்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ரூ.2 லட்சத்திற்கு மத்திய அரசின் மானியத் தொகையுடன் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்றுள்ளார்.
இதனையடுத்து, மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும் மானியம் ரூ.50 ஆயிரம் பெறுவதற்குக் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாவட்ட தொழில் மையத்தை அணுகி உள்ளார் குமாரசாமி. இதுவரை அதிகாரிகள் வழங்காமல் அலைக்கழித்தார்களாம். மேலும், மத்திய அரசின் மானிய பணம் வேண்டுமென்றால், லஞ்சம் கொடுக்க வேண்டும் என மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமார் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால் லஞ்சம் தர விரும்பாத குமாரசாமி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2,500-ஐ குமாரசாமியிடம் கொடுத்தனுப்பினார்கள்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.2,500-ஐ குமாரசாமி கொடுத்தார். அதை சிவக்குமார் வாங்கிய உடன், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திர மூர்த்தி, காவல் ஆய்வாளர் தமிழ் அரசி தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், உதவியாளர் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications