'யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன்': குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்க.. கெஞ்சிய எஸ்ஐ இவர்தான்!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பென்னலூர்பேட்டை அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக மக்களால் வரவேற்பை பெற்றுள்ளது. காவல் உதவி ஆய்வாளரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
கல்வி தான் இந்த உலகின் ஆகச்சிறந்த சொத்து என்பதை உணர்ந்த தமிழகத்தின் தலைவர்கள், போட்டி போட்டுக்கொண்டு படிக்க வைப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்தினார்கள். காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி, மு.க.ஸ்டாலின் வரை அத்தனை தலைவர்களுமே மாணவர்களை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று பல திட்டங்களை அறிவித்தார்கள்.

ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்று தொடங்கி, சத்துணவு, சத்துணவில் முட்டை, அங்கன்வாடி திட்டம், இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கு சைக்கிள், சீருடைகள், லேப்டாப், காலை உணவு, மாணவிகளுக்கு மாதம் உதவி தொகை வரை கல்விக்காக திட்டங்கள் திட்டினார்கள். இதன் விளைவாக தமிழகம் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக மாறியது.
இந்நிலையில் இன்றும் சிலர் படிக்க வைக்க விரும்பாமல் குழந்தைகளை வீட்டிலேயே வைத்துக்கொள்வது எங்காவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படிப்பட்ட மாணவர்களை தேடிக்கண்டுபிடித்து படிக்க வைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பென்னலூர்பேட்டை அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதிக்கு நேற்று சென்ற, பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து அம்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்

அந்த வீடியோவில் எஸ்ஐ பரமசிவம் பேசுகையில், , "யாருக்காக உதவி தேவைப்பட்டால் என்னை காவல் நிலையத்தில் பார்க்கலாம். 24 மணி நேரமும் காவல் நிலையம் உங்களுக்காக திறந்தே இருக்கும். பள்ளி கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை தயங்காமல் கேளுங்கள். உங்களது கையெடுத்துக் கேட்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.
5 நாட்கள் பள்ளிகளில் முட்டையும், 2 நாட்களுக்கு பயறும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் தான் பெரிய குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. தப்பான மூட நம்பிக்கையால் மாட்டிக்காதீங்க" என்று உருக்கமாக எஸ்ஐ பரமசிவம் பேசினார்.

இந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்த பொதுமக்கள் பலரும் காவல் உதவியாளர் பரமசிவத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களும் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். உண்மையில் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் போன்றோர எப்படியாவது பிள்ளைகள் படித்து முன்னேறிவிட வேண்டும் என்று போராடியதால் தான் இன்று தமிழகம் முன்னேறிய மாநிலமாக உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications