ச்சீ.. ச்சீ.. திருவள்ளூர் சிறுமி வழக்கில் கைதான நபரை மனைவியே ஒதுக்கியுள்ளாராம்.. அதிர்ச்சி வாக்குமூலம்
திருவள்ளூர்: திருவள்ளூர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ராஜூ காவல்துறையில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான்.
அன்றைய தினம் முதலில் கர்ப்பிணி பெண்ணை குறிவைத்து சென்றுள்ளான். ராஜூ செயல்பாட்டால் மனைவியே பிரிந்து வாழ்வதும் தெரியவந்துள்ளது. ராஜூவை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல்துறை திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி, 10 வயது சிறுமி மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை அந்த நபர் பின் தொடர்ந்து தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
13 நாட்களில் கைது
சிசிடிவி கேமரா அடிப்படையில் அந்த நபரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டது. அந்த நபரின் வீடியோ கிடைத்தாலும், அவரைப் பற்றிய மற்ற விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரைப் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது.
பல்வேறு தனிப்படைகள் அமைத்து அந்த நபர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மா என்ற நபர் என தெரியவந்தது. அவரை கடந்த 25 ஆம் தேதி காவல்துறையினர் ஆந்திரா மாநிலத்தில் வைத்து கைது செய்தனர். சம்பவம் நடைபெற்று 13 நாட்கள் கழித்தே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
காவல்துறை கஸ்டடி விசாரணை
கைது செய்யப்பட்ட ராஜூவை ஆரம்பாக்கம் காவல்துறையினர், திருவள்ளூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இந்த கோர சம்பவத்தால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜூ பிஸ்வகர்மாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆரப்பாக்கம் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ராஜூ பிஸ்வகர்மா காவல்துறையில் முதல்கட்டமாக அளித்துள்ள வாக்குமூலமே பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த நபர் ஆந்திரா சூலூர்பேட்டையில் உள்ள தாபாவில் பணியாற்றி வருகிறார். நேரம் கிடைக்கும்போது உள்ளூர் ரயில்களில் உலா வருவாராம். அப்போது பெண்களை நோட்டமிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
மனைவியே.. அதிர்ச்சி வாக்குமூலம்
அன்றைய தினம் சூலூர்பேட்டை செல்வதற்காக ஆரப்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை ராஜூ பின் தொடர்ந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணை மற்றொரு பெண் அழைத்து சென்றதால் ராஜூ அவரை பின் தொடர்வதை விட்டு, அந்த வழியே சென்ற சிறுமியை பின் தொடர்ந்துள்ளான்.
பிறகு அருகில் உள்ள பகுதிக்கு தூக்கி சென்று வன்கொடுமை செய்துள்ளான். கைது செய்யப்பட்ட ராஜூவுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் அவனின் நடவடிக்கை பிடிக்காமல் மனைவி வெறுத்து ஒதுங்கியுள்ளார். மனைவி பிரிந்த விரக்தியில் தான் இப்படி நடந்து கொண்டதாக ராஜூ பிஸ்வகர்மா வாக்குமூலம் அளித்துள்ளான். அவனை காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரிக்கும்போது மேலும், பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications