எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைத்த பேனரால் விபரீதம்.. இளம்பெண் படுகாயம்.. திருத்தணியில் பரபரப்பு!
திருவள்ளூர்: திருத்தணியில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கொண்டு சென்ற பேனர் விழுந்ததில் இளம்பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. பேனர் கலாசாரத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுவதால், பேனர்களை தவிர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

எனினும், அரசியல் கட்சிகளின் பேனர் கலாச்சாரம் இன்னும் குறையவில்லை. தங்களது செல்வாக்கை காட்டும் வகையில், கட்சியினர் பேனர்களை சாலையோரங்களில் வழிநெடுக வைத்து வருகின்றனர். அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அதிமுகவினர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் பேனர்களை வைத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருத்தணி வழியாக திருப்பதி கோவிலுக்குச் செல்ல உள்ள நிலையில், அவரை வரவேற்கும் வகையில், திருத்தணியில் நெடுஞ்சாலையில், அதிமுகவினர் பேனர்களை வைத்து வருகின்றனர். திருத்தணி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர் அமைத்துள்ளனர்.

இதனை, சாலை ஓரத்தில் வைப்பதற்காக, பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் வைத்து பாதுகாப்பற்ற முறையில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது பேனர் திடீரென சரிந்து, பின்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற கீர்த்தனா என்ற இளம்பெண் மீது விழுந்தது. இதில் இளம்பெண் காலில் கடும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு, இளம்பெண் கீர்த்தனாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications