15 வயது சிறுமி கருக்கலைப்பு மாத்திரையால் பலி.. நம்பவைத்து மோசம் - போலி டாக்டர் உள்ளிட்ட 3 பேர் கைது!
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கருக்கலைப்பு முயற்சியில் 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம் அருகே பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பமான நிலையில் நடந்த கருக் கலைப்பு முயற்சியில் 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது சிறுமி
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் செங்கம் அருகே மலையனூர்செக்கடி கிராமத்தில் வசித்த 15 வயது சிறுமி ஒருவர், 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை, அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான முருகன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதனால், இருவரும் நட்பாகப் பழகியுள்ளனர். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி முருகன் பலமுறை அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

கருக்கலைப்பு மாத்திரை
இதனைத்தொடர்ந்து சிறுமி கருவுற்ற நிலையில், அதுகுறித்து முருகனிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்த முருகன் கருவைக் கலைக்க முடிவு செய்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி முருகனின் நண்பரான பிரபு என்பவர் அந்தச் சிறுமியை, ரெட்டியார்பாளையத்தில் உள்ள போலி பெண் மருத்துவரான காந்தி என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமிக்கு கருக் கலைப்பு மாத்திரையை காந்தி கொடுத்துள்ளார். சிறுமிக்கு ஊசியும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பலியான சிறுமி
அங்கிருந்து புறப்பட்டு பள்ளிக்குச் சென்றபோது சிறிது நேரத்திலேயே அந்தச் சிறுமி மயக்கமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

பெற்றோர் புகார்
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தானிப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தமது மகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கொன்று விட்டதாக புகார் மனு அளித்துள்ளார் சிறுமியின் தந்தை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி போக்சோ சட்டம் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முருகன் மற்றும் அவரது நண்பர் பிரபுவை கைது செய்தனர்.

போலி பெண் மருத்துவர்
மேலும், வலைவீசித் தேடி போலி பெண் மருத்துவர் காந்தி என்பவரையும் கைது செய்துள்ளனர். காந்தியின் வீட்டில் மருத்துவக் குழுவினர் சோதனை நடத்தி, அங்கிருந்த ஊசி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கருக்கலைப்பு முயற்சியில் பள்ளிச் சிறுமி உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
