திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா! "அரோகரா" முழக்கத்தோடு ஏற்றப்பட்ட மகா தீபம்! பக்தர்கள் பக்தி பரவசம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டனர். அரோகரா என்ற பக்தி முழக்கத்தோடு அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கியது. தீபத்திரு விழா உற்சவத்தின் 10-வது நாளான இன்று மகா தீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் கோயில் மூலவர் சன்னதியில் இருக்கும் அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப் பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது.
மகாதீபம் ஏற்றப்பட்டது
பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று கோஷம் எழுப்பி வணங்கினர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.. 2668 அடி மலை மீது காத்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தீபத்தை தரிசிப்பார்கள். இந்த தீபம் தரிசனத்தை 40 கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும்.
2500 கிலோ
பரணி தீபத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகா தீபம் ஏற்ற 3 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications