ஆளுநர் நிராகரித்திருப்பது அநியாயம்.. ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளின் கூட்டாளி.. சாடும் பாலகிருஷ்ணன்!
ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக ஆளுநர் செயல்படுவதாக பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை: ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக செயல்படுவதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியபோதும் அதனை ஆளுநர் நிராகரித்திருப்பது அநியாயம் என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்.19ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக பரிசீலனையில் இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அந்த சட்ட மசோதாவில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்த நிலையில், மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CPIM Balakrishnan
இந்த நிலையில் திருவண்ணாமலை அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு பேரணியாக புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாலகிருஷ்ணன் பேட்டி
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், திருவண்ணாமலை இனாம் காரியந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுளது. நான்கு வழி சாலைகளை அமைக்காமல் இருவழிச்சாலையாக இருக்கும்போது சுங்கச்சாவடி அமைத்து மத்திய அரசு கொள்ளையடித்து வருகிறது. சுங்கச்சாவடி அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் இருந்த போதும் அனைத்து விதிமுறைகளையும் மீறி திருவண்ணாமலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி விவகாரம்
சுங்கச்சாவடியை அப்புறப்படுத்தக்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வித பலனும் இல்லை. மாநில அரசு கூறுவதையும் மத்திய அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல் 20 சதுர கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக சுங்கச்சாவடியில் அனுமதி வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா திருப்பி அனுப்பபட்டது பற்றிய கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜகமான செயல். ஜனநாயகத்திற்கு விரோதம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துவிட்டனர். பல ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். தங்களது சொத்தையும் இழந்து குடும்பத்தையும் இழந்து நடுவீதியில் நின்று கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியபோதும் அதனை ஆளுநர் நிராகரித்திருப்பது அநியாயம். தொடர்ந்து விளக்கம் கேட்கும் ஆளுநர் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications