இன்ஸ்பெக்டர் அல்லிராணிக்கு சல்யூட் செய்த திருவண்ணாமலை ஆட்சியர் - காரணம் என்ன
சுதந்திர தின விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல்துறை பெண் ஆய்வாளர் அல்லிராணிக்கு சல்யூட் வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை: சுதந்திர தின விழா மேடையில் மாவட்ட ஆட்சியர் திடீரென தான் நின்றிருந்த இடத்தில் பெண் இன்ஸ்பெக்டரை அழைத்து சல்யூட் அடித்து மரியாதை செய்த சம்பவம் விழாவில் பங்கேற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்சியர் மரியாதை செய்த அந்த பெண் இன்ஸ்பெக்டர் பெயர் அல்லிராணி. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிதான் பெண் இன்ஸ்பெக்டரை கவுரவப்படுத்தியவர்.
Recommended Video
நாடு முழுவதும் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்றது. திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார்.

அப்போது காவல்துறையைச் சேர்ந்த 30 பேருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார். அதில் தெள்ளார் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் அல்லிராணிக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம், பதக்கத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திடீரென மாவட்ட ஆட்சியர் விழா மேடையில் இருந்து கீழே இறங்கினர். அதனைத் தொடர்ந்து அவர் நின்றிருந்த இடத்தில் அல்லிராணியை நிற்க சொன்னார். அதேபோல் அல்லிராணியும் ஆட்சியர் கூறியதால் அந்த இடத்தில் நின்றார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அல்லிராணிக்கு சல்யூட் அடித்து மரியாதைச் செய்தார். இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட ஆட்சியர் சல்யூட் அடித்தது விழாவில் பங்கேற்றவர்களை வியப்படைய வைத்தது.

இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏரிப்பட்டு கிராமத்தில் அமாவாசை என்பவர் மின்வேலியில் சிக்கி இறந்தார். அவர், கொரோனாவுக்கு இறந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரின் உடலை தூக்க மறுத்தனர். உடனடியாக அல்லிராணி களத்தில் இறங்கி உயிரிழந்த அமாவாசையின் உடலை தூக்கி அப்புறப்படுத்தினார். இதற்காக, அவருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். அல்லிராணிக்கு 'கல்பனா சாவ்லா' விருதுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications