அடிக்கடி குறுக்கிட்ட திமுக பிரமுகர்.. "who are you".. திருவண்ணாமலை கோயிலில் நீதிபதி கோபமாக கேள்வி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பகுதியில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வழக்குத் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், செளந்தர் ஆகியோர் நேற்று முன்தினம் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தி.மு.க பிரமுகர் ஸ்ரீதரன் அடிக்கடி குறுக்கிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி, "நீங்கள் யார்" என்று அவரைக் கண்டித்தார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்து அறநிலையத்துறைக்கு கண்டனம்
சில நாட்களுக்கு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கட்டுமான பணி தொடர்பான வரைபடத்தையும், அது தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய அறநிலையத்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, கோவிலுக்கு வெளியில் வணிக வளாகம் கட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், கோவிலுக்குள், அதாவது 4-வது பிரகாரத்தில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டப்படுகிறது என்று கூறி ஆதாரமான புகைப்படங்களை டிஆர் ரமேஷ் தாக்கல் செய்தார். இதைப்பார்த்த நீதிபதிகள் ர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர், இந்து அறநிலையத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நேரில் ஆய்வு செய்வோம்
தொடர் விசாரணைக்கு பின்னர் வழக்கை வருகிற 16-ந் தேதிக்கு வழக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் அமர்வு, அதுவரை, திருவண்ணாமலை கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டும் பணியை மேற்கொள்ளக்கூடாது. அதாவது கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக நாங்களே (நீதிபதிகள்) வந்து ஆய்வு செய்வோம் என்றும் கூறியிருந்தனர்.
கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் நேற்று முன்தினம் (ஞாயிறு) திருவண்ணாமலைக்கு வந்தனர். அவர்கள் கோவில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் அருகே கட்டுமான பணி நடக்கும் இடம், கோசாலை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கோவில் யானை புதைக்கப்பட்ட இடம், அம்மன் தேர் பகுதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கலெக்டர் தர்ப்பகராஜ், கோவில் இணை ஆணையர் பரணிதரன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கண்டித்த நீதிபதிகள்
அப்போது நீதிபதிகள், அதிகாரிகளிடம் கோயில் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்கள். மேலும் ராஜகோபுரம் முன்பு பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும், கோவில் வளாகத்தில் நிரந்தர கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள். இந்நிலையில் ஆய்வின் போது குறுக்கிட்டு பேசிய திமுக பிரமுகர் ஸ்ரீதரனை நீதிபதிகள் கண்டித்தனர். "who are you" என்று அவரை நோக்கி நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், திமுக பிரமுகர் அமைதியாக இருந்தார். அதன்பின்னர் வழக்கம் போல் ஆய்வு பணிகளை நீதிபதிகள் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications