ஆடு, மாடு, விவசாயம்.. அண்ணாமலை ஹேப்பி அண்ணாச்சி.. இனி மேலும் இப்படித்தானாம்
திருவண்ணாமலை: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை கோயில் சென்றார். கிரிவலப்பாதையில் தியானம் செய்த அவர், தலைவர் பதவி இல்லாத நிலையில், ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டவுடன் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகியுள்ளார். மிகவும் அரிதாகத்தான் அவர் வெளியில் தலை காட்டுகிறார். இந்நிலையில் அண்ணாமலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார். கிரிவலப் பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் அவர் தியானம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஆடு மற்றும் மாடுகளுடன் நன்றாக இருக்கேன். விவசாயம் செய்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போது கோயில் சென்று நிம்மதியாக தியாகம் செய்கிறேன். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கட்சி சொல்லும் பணிகளை ஆங்காங்கே செய்து வருகிறேன்.
தலைவராக இங்கே செல்ல வேண்டும்.. அங்கே செல்ல வேண்டும் என்றில்லாமல் நிம்மதியாக வாழ்க்கையில் இருக்கிறேன். அதே நேரத்தில் மக்கள் பணியையும் செய்கிறேன். எங்கள் வீட்டின் முன்பு தினசரி வெயிலில் கஷ்டப்படும் 2,000 - 3,000 மக்களுக்கு மோர் கொடுக்கிறேன். இதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது.
மக்கள் பணியும் இருக்கும். தேவையில்லாத வேலையில் மாட்டவில்லை. என்னுடைய பணியை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். புத்தகம் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. தந்தையாக என் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிகிறது. என் பெற்றோர், மனைவி ஆகியோருடன் நேரம் செலவிடுகிறேன்.
நீண்ட காலத்துக்கு பிறகு என் அம்மா, அப்பாவுடன் அமர்ந்து நிம்மதியாக சாப்பிடுகிறேன். இது சிறப்பாக தோன்றுகிறது. இதிலேயே பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தொண்டனாக நரேந்திர மோடிக்கு பணி செய்ய வேண்டும். என்னுடைய ஆசைப் பெரிது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதற்கான காலம் வரும். அதுவரைக்கும் தொண்டனாக என்னுடைய வேலையை செய்வேன். ஊட்டியில் வெயில் குறைவு. வெயில் குறைவாக இருந்தால் பேச்சு மாறும். சென்னை வெயிலுக்கு வந்தால் தெளிந்துவிடும். 2026 தேர்தலிலேயே அவர்கள் உறுதியாக தோற்பார்கள். இதை ஸ்டாலினும் உறுதியாக உணர்வார்.
எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. அதில் திமுகவினர் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். எல்லோரும் எங்களுடன்தான் உள்ளனர். யாரும், எங்கேயும் பிரிந்து செல்லவில்லை. கூட்டணி குறித்து தலைவர்கள் கூறுவார்கள். தொண்டனாக மோடிக்காக என்னுடைய பணியை செய்து வருகிறேன். முதலமைச்சரை சாமானிய மனிதனாக நான் விமர்சிக்கலாம்.
கூட்டணி விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட கருத்து இருந்தாலும், அதை கட்சி தான் முடிவு செய்யும். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஓபிஎஸ் எங்கும் பிரிந்து செல்லவில்லை. அவர் எப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் ஓபிஎஸ்க்கு எப்போதும் தனி இடம் உண்டு.
அதில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் உள்ளது. அமித்ஷா கடந்த முறை திட்டமிட்டு வந்தப் பயணம் வேறு. அவரின் தேசிய ஜனநாயக கூட்டணி சம்பந்தப்பட்ட வருகையில் எல்லாம் சரியாகிவிடும்." என்றார்.












Click it and Unblock the Notifications