திருவண்ணாமலை மண் சரிவு துயரம்.. 7 பேர் உடலுக்கு கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்திய அமைச்சர் எவ வேலு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி பலியான 7 பேரின் உடலுக்கு இன்று அமைச்சர் எ.வ. வேலு அஞ்சலி செலுத்தினார். அப்போது, பலியானோரின் உறவினர்கள் கதறி அழுததைப் பார்த்து கண் கலங்கினார் அமைச்சர் எவ வேலு.
திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் தீபம் ஏற்றும் அண்ணாமலையார் மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மண் சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள வஉசி நகரில் 2 வீடுகள் மண் சரிவில் புதைந்தன. அதில், ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில், மற்றொரு வீட்டில் இருந்தவர்கள் மண் சரிவில் சிக்கிக் கொண்டனர்.

அந்த வீட்டுக்குள் இருந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார் (32) அவரது மனைவி மீனா (26), மகன் கவுதம் (9), மகள் மீனா(7) மற்றும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த சுரேஷ் மகள் மகா (12), சரவணன் மகள் ரம்யா (12), மஞ்சுநாதன் மகள் வினோதினி (14) ஆகிய 7 பேரும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 பேர், மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 50 பேர் மற்றும் தீயணைப்பு துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
குறுகலான பாதை என்பதாலும், மலைப்பகுதி என்பதாலும் பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வர முடியாததால், மண் சரிவை அகற்றுவதில் சிக்கலும் தாமதமும் ஏற்பட்டது. தொடர்ந்து, சிறிய ஜேசிபி இயந்திரத்தை குறுகலான பாதையின் வழியே படிப்படியாக கொண்டு சென்று மீட்பு பணி நடந்தது. தொடர்ந்து 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் மாலை 5.45 மணியளவில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து ஒரு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அடுத்தடுத்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன. இரவுக்குள் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 2 சடலங்கள் மண்ணின் ஆழத்தில் சிக்கியிருந்ததால் வெளியே எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட 5 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 3வது நாளாக நேற்று காலை மீட்பு குழுவினர் 2 சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மண்ணில் புதைந்து கிடக்கும் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் நேற்று இரவு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவர்களின் உடல்களை கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியான நிலையில், அவர்களில் 4 பேர் பிஞ்சுகள். 7 பேரின் உடல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது அனைவரின் கண்களையும் கலங்கச் செய்தது.
மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, 7 பேரின் உடலை பார்த்து அமைச்சர் எ.வ.வேலு கண் கலங்கினார். மண் சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications