நோட் பண்ணுங்க! சென்னை டூ திருவண்ணாமலை.. கிரிவலம் போக சிறப்பு ரயில்! முழு விவரம் இதோ
திருவண்ணாமலை: பவுர்ணமி நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், இது குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆன்மீக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இங்குள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள மலையை பக்தர்கள் சிவனாக கருதுவதால், 14 கி.மீ சுற்றளவுகொண்ட இந்த மலையை சுற்றி வந்து வழிபடுகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவதால் திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இப்படியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பான போக்குவரத்தை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும், குறிப்பாக சென்னையிலிருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது வந்தது. இந்நிலையில், சமீபத்தில் திருச்சியில் தெற்கு ரயில்வே சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களின் குறைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை, பவுர்ணமி நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை-திருவண்ணாமலை இடையேயான சிறப்பு ரயில்கள் குறித்த அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னையிலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள், பவுர்ணமி அன்று திருவண்ணாமலை வரை நீடிக்கப்படும். அதேபோல சென்னையிலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரயில் அங்கிருந்து திருவண்ணாமலைக்கு திருப்பி விடப்படும். பவுர்ணமி தினத்தில் வேலூர் கன்டோன்மென்ட் வரை வரும் ரயில் இரவு 9.50 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்து சேரும்.
அதேபோல திருவண்ணாமலையிலிருந்து ரயில் காலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் வந்து சேரும். அதன் பின்னர் இந்த ரயில் சென்னைக்கு செல்லும்.
அதேபோல, சென்னையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் ரயில், அங்கிருந்து காலை 9.15 மணிக்கு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக காலை 11 மணியளவில் திருவண்ணாமலை வந்து சேரும். பின்னர் மதியம் 12.40 மணியளவில் அங்கிருந்து புறப்படும் இந்த ரயில், பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இது தவிர விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் பவுர்ணமி தினத்தன்று மட்டும் திருவண்ணாமலை வரை நீடிக்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் இந்த ரயில், இரவு 9.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர் இங்கிருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் வந்தடையும்.
இப்படியாக ஜூலை 2ம் தேதி தொடங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை பின்வரும் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஜூலை - 2, 3, 30 மற்றும் 31ம் தேதி
ஆகஸ்டு - 30 மற்றும் 31ம் தேதி
செப்டம்பர் - 28 மற்றும் 29ம் தேதி
அக்டோபர் - 27 மற்றும் 28ம் தேதி
நவம்பர் - 26 மற்றும் 27ம் தேதி
டிசம்பர் - 25 மற்றும் 26ம் தேதிகளில் பவுர்ணமி வருகிறது. எனவே இந்த தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications