தினம் 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனை.. தி.மலை ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சக்சஸ் கதை!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: இலாபத்தை இலட்சியமாகக் கொள்ளாத நிறுவனம் ஆவின். அதன் வெற்றிக்குப் பின்னால் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார்கள் திருவண்ணாமலை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்.

இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 618 பால் உற்பத்தி சங்கங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஒரு அரசு நிறுவனத்திற்குப் பின், ஒளிந்திருக்கும் விவசாய மக்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.

 Success story of milk producers of Thiruvannamalai district

அதிமுக ஆட்சியில் மிகக் கடுமையான பால் விலை உயர்வைச் சந்தித்த தமிழ்நாடு, இன்றைக்குத் திமுக ஆட்சியில் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதைப்போல் லிட்டருக்கு 3 ரூபாய் பால் விலை குறைக்கப்பட்டு, வழங்கப்படுகிறது.

ஒருநாளைக்கு 2 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர்: தினம் 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் ஆவின் மூலம் விநியோகிக்கப் படுகின்றது. இந்த ஆட்சியில் எப்படிச் செயல்படுகிறது இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள்?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பால்வளத்துறை அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிற சரணாதியம்மாள் நம்மிடம் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 618 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த சங்கங்களிலிருந்தும் ஒரு நாளைக்குச் சராசரியாக 2 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் பாலை நாம் கொள்முதல் செய்து வருகிறோம்.

 Success story of milk producers of Thiruvannamalai district

இந்த ஒட்டுமொத்த சங்கங்களிலும் கிட்டத்தட்ட 39 ஆயிரம் பால் கறவைதாரர்கள் உள்ளனர். இந்தக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாகக் கொள்முதல் செய்யப்படும் பால், உள்ளூர் தேவைப் போக மீதம் உள்ளதை அப்படியே ஆவின் நிறுவனத்திற்கு எடுத்துக் கொள்கிறோம்.

இந்தக் கூட்டுறவுச் சங்கங்களில் அதிகமாக உற்பத்தியாகின்ற பருவகாலம் என்று ஒன்று உள்ளது. அதேபோல் குறைந்த அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகின்ற பருவகாலம் என்று ஒன்றும் உள்ளது.

நாம் ஆவின் மூலமாக அதிகமாக உற்பத்தி காலத்திலும் குறைவாக அளவு உற்பத்தியாகும் காலத்திலும் முழுமையாக அளவை குறைக்காமல் அப்படியே கொள்முதல் செய்துவருகிறோம்" என்கிறார்

இவரைப் போலவே இதே மாவட்டத்தில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் மீனாட்சி. அவர் நம்மிடம், " இங்குச் சங்கங்கள் மூலமாகக் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி லிட்டருக்கு 33 ரூபாயிலிருந்து தொடங்கி 39 ரூபாய் வரை விலை கறவைதாரர்களுக்கு தொகை வழங்கப்படுகிறது.

தரத்திற்கு ஏற்ப வழங்கப்படும் பால் விலை: வேதபுரம் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து இங்கே பால் ஊற்றிவரும் கறவைதாரர் பவழமல்லி, " பாலின் தரத்தைப் பொறுத்து நல்ல விலைக்குப் பாலை கொள்முதல் செய்துவருகிறார்கள்.

என்னிடம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகையை எனது வங்கிக் கணக்கிலேயே செலுத்திவிடுகிறார்கள். 4 நாள்களுக்கு ஒருமுறை கொள்முதல் பணம் என் வங்கிக் கணக்கு சரியாக வந்து சேர்ந்துவிடுகிறது" என்கிறார்.

 Success story of milk producers of Thiruvannamalai district

யாதவபுரத்தைச் சேர்ந்த பரசுராமன், "என்னிடம் 2 கறவை மாடு உள்ளன. காலை 5 லிட்டர் பால் கறக்கின்றேன். மாலை அதேபோல 5 லிட்டர் கிடைக்கிறது. காலையில் 5 மணிக்கு எழுந்துவிடுவேன். அப்போதே மாட்டுக்குத் தீவனம் வைத்துவிடுவேன்.

அதன்பின் பாலைக் கறந்து சரியாகக் காலை 6 மணிக்கு ஆவின் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டுவந்து பாலை ஊற்றிவிடுவேன். அவர்கள் பாலில் உள்ள கொழுப்பின் அளவை சரியாகக் கணித்து, அதற்கான விலையில் வாங்கிக் கொள்கின்றனர்.

பணத்தைச் சரியாக வங்கிக் கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள். அதேபோல மாதம் ஒருமுறை மாட்டுக்கான தீவனமும் வாங்கி விடுகிறார்கள்" என்கிறார்

கறவைதாரர் பரீத் கான். இவர் கொளக்கரவாடியைச் சேர்ந்தவர். அவர், " ஒருவேளைக்கு 15 லிட்டர் வரை பால் ஊற்றுகிறேன். ஒருநாளைக்கு 30 லிட்டர் வரை ஊற்றுகிறேன். எனக்கு 15 நாளுக்கு ஒருமுறை பணம் போடுகிறார்கள். அதுவும் நேரடியாக வங்கியில் வந்துவிடும்.

"பாலை மட்டுமே கொள்முதல் செய்வதில்லை. மாட்டுக்குச் சினை ஊசி எல்லாம் கூட ஆவின் கூட்டுறவுச் சங்கம்தான் போடுகிறது" என்கிறார் கறவைக்காரர் அருள் மலர்

கறவை மாடுகளைப் பரிசோதிக்க மருத்துவக் குழு: திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூர் கூட்டுறவுச் சங்க செயலாளர் வள்ளியம்மாள், "எங்களிடம் 145 பேருக்கு மேல் உறுப்பினராக இருக்கிறார்கள். 8 வருடங்களாகச் சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆரம்பம் முதலே 'டெஸ்ட் ரேட்'டில் தான் பாலை கொள்முதல் செய்கிறோம்.

எல்லோருக்கும் ஒரே விலை என்பது இல்லை. தரத்துக்கு ஏற்ப பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. பாலை கூட்டுறவுச் சங்கத்திற்குக் கொண்டுவருபவர்கள் யாரும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது விதி.

ஆகவே அனைத்து கறவைதாரர்களுக்கு நாங்களே பால் கேன் வாங்கிக் கொடுத்துள்ளோம். அதில்தான் பாலைக் கறந்து கொண்டுவர வேண்டும்.

 Success story of milk producers of Thiruvannamalai district

அப்படி அவர்கள் கொண்டுவந்து ஊற்றும் பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா? அதன் தரம் சரியாக உள்ளதா? எனக் கணக்கிடுவோம். அதன் மூலம்தான் விலை நிர்ணயம் செய்வோம். ஆகவே பலரும் தரமான பாலை கொண்டுவந்து தரவே முனைப்புக்காட்டுவார்கள்" என்கிறார்

நாம் அடுத்ததாக ந.மு.மணிகண்டனிடம் பேசினோம். இவர் ஒரு முதுநிலை ஆய்வாளர். அவர், "திருவண்ணாமலை மாவட்டம் என்பதை மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இங்கே அதிகமான தொழிற்சாலைகள் இல்லை. அதிகமான விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டம் இது.

ஆகவே பூக்களைப் பயிரிடுவது, கரும்பு, நெல் போன்றவற்றை விவசாயம் செய்வது என்பதுதான் இங்கே பிரதான தொழில். இந்தப் பால் உற்பத்தி என்பது உபதொழில்தான். விவசாயம் போக மற்ற நேரங்களில் இந்தப் பால் தொழில் பல குடும்பங்களை வாழவைத்து வருகிறது" என்கிறார்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விலை குறைவு: இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், "ஆவின் நிறுவனம் என்பது லாப நோக்கம் இல்லாது; மக்களுக்கான சேவை நோக்குடன் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதைத்தான் நாங்கள் கொள்கையாக வைத்து ஆவின் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம்.

அதனடிப்படையில் தான் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் லிட்டர் பாலின் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்ட போது, 'மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் 3ரூபாய் குறைப்பேன்' என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

 Success story of milk producers of Thiruvannamalai district

அவர் சொன்னதைப் போல் ஆட்சிக்கு வந்ததும் விலையைக் குறைத்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே 3 ரூபாய் பால் விலையைக் குறைப்பதற்காகக் கோப்பில்தான் என்பதைப் பலரும் அறிவார்கள்.

இதனால் நாள் ஒன்றுக்கு 85 லட்ச ரூபாய் ஆவின் நிர்வாகத்திற்கு நிதிச்சுமை ஏற்பட்டது. அப்படி இருந்தும் அதைக் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கவலைப்படவில்லை. சேவை நோக்குடன் செயல்பட்ட அனுமதித்துள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பால் விலையும் அதன் உபபொருட்கள் விலையும் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. இதை நான் சொல்லவில்லை. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலே அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 Success story of milk producers of Thiruvannamalai district

ஆவின் மூலமாக மாட்டுக்குத்தேவையான தீவனங்களைக் கொள்முதல் செய்து வழங்கி வருகிறோம். இதனால் முறையான தீவனம் மாட்டுக்குக் கிடைக்கிறது. அதன்மூலம் பால் உற்பத்தியும் தடைப்படாமல் செல்கிறது.

இந்த மாட்டுத்தீவனத்திற்கு உற்பத்தி செலவு 24 ரூபாய் ஆகிறது. ஆனால், 3 ரூபாய் குறைத்து பயனாளிகளுக்கு வழங்குகின்றோம். இது மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைவிட மிகமிக விலை குறைவு. சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு பயனாளருக்குத் தீவனமானது 50 மூட்டைகள் வழங்கப்படுகிறது

வெளிநாட்டுக் காளைகளின் கலப்பின ஊசி: இவைப் போக 'ரூட் டாக்டர்ஸ்' என்று ஒரு குழுவை அமைத்துள்ளோம். அவர்கள் முறையாக கறவைதாரர்களின் மாடுகளை நேரில் சென்று பராமரித்து, அவற்றை நோய் தாக்குதலிருந்து காப்பாற்றி வருகிறார்கள். மேலும் செயற்கை முறையில் மாட்டுக்குக் கருவூட்டல் செய்யப்படுகிறது.

இதற்காக 10 கிராமத்திற்கு ஒரு அதிகாரி உள்ளார். இதற்கான சினை ஊசிகள் ஊட்டியில் உள்ள ஆய்வகத்தில் தயாரித்து வழங்கப்படுகிறது. இது கூட வெளிநாட்டுக் காளைகள் மட்டும் இந்தியக் காளைகளின் கலப்பின விந்தை வைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

 Success story of milk producers of Thiruvannamalai district

இதற்கு எல்லாம் மேலாகப் பயனாளிகளுக்கு முக்கியமான தேவை பொருளாதாரம். ஆகவே அனைவருக்கு மாட்டுக் கடன் அளித்து வருகிறோம். இத்தனை செயல்களையும் கடந்துதான் தினம் நமக்கு 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் மக்களைப் போய்ச் சேர்கின்றன " என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+