பரபரப்பு! தமிழகத்தில் ஹிஜாப் சர்ச்சை.. +2 மாணவியை கண்டித்த அரசு பள்ளி ஆசிரியை.. பெற்றோர்கள் முற்றுகை
திருவண்ணாமலை: போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என பள்ளி ஆசிரியை கண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த பிப். மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரும் எடுத்து இருந்தது. அங்கு பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியப் பள்ளி, கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது,
அதற்கு எதிராக முஸ்லீம் மாணவிகள் போராடி, இந்துத்துவ மாணவர்கள் சிலர் காவி துண்டு அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இதனால் வெறு வழியின்றி பள்ளி, கல்லூரிகள் மூடும் நிலை கூட ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு அங்கு இப்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்குள்ள பள்ளி ஆசிரியை லட்சுமி என்பவர் +2 மாணவிகள் சிலரை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஏற்கனவே 2 வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவித்த மாணவியின் பெற்றோர், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என்று உறுதி அளித்தார். அதன் பின்னரே பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications