மகளிர் உரிமைத்தொகை.. தமிழக அரசு தரப்போகும் சர்ப்பைரஸ்.. உதயநிதி பேட்டியை கவனித்தீர்களா?
திருவண்ணாமலை: அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருவதாக, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்று ஆய்வு செய்ய உதயநிதி ஸ்டாலினிடம் பல பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களிடம் உதயநிதி ஸ்டாலின், அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று திருவண்ணாமலை வந்தார். இங்கு கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அடிஅண்ணாமலை பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் கிரிவலப்பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மூலம் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை குடித்து பார்த்து சோதனை செய்தார்.

அப்போது கிரிவலப்பாதையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அங்கிருந்த பொதுமக்களிடம் சென்ற உதயநிதி ஸ்டாலின், அவர்களிடம் பேசினார். அப்போது அங்கிருந்த பலர், கலைஞர் உரிமைத்தொகை இந்த பகுதியில் பெரும்பாலான பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கும் என்றார்.
தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடி பேருக்கு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்த அரசு, அதற்காக சில பொருளாதாரத் தகுதிகளை வரையறை செய்து தான் வழங்கி வருகிறது. ஆனால் அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமாக, அதாவது ஒரு கோடிக்கும் அதிகமா னோர் அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிப் பட்டியலுக்குள் வந்தார்கள்.. அவர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கி வருகிறது.
ஆரம்பகட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் ஆவ ணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. அதன்பிறகு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டார்கள். தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள்.
அதேநேரம் இன்னும் பல மகளிருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.. தமிழ்நாட்டில் 2 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை.. இதனால் பொருளாதார தகுதியில் சில தளர்வுகளை அளித்து மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாமை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருவதாக உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications