திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கேஸ் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி எவ்வித அச்சமும், பாதுகாப்பும் இல்லாமல், சட்டவிரோதமாக தனியார் கேஸ் நிறுவனம் ஒன்று வீடு மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு அதிக விலைக்கு கேஸ் நிரப்புவதாக குற்றச்சாட்டினை பொதுமக்கள் முன்வைக்கிறார்கள். தனியார் கேஸ் நிறுவனம் ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் சி.என்.ஜி. கியாஸ் பங்க்கில் மக்கள் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரில் கியாஸ் நிரப்புவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரான் போர் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிக பயன்பாட்டிற்கு உள்ள கியாஸ் சிலிண்டர்களின் விலை ரூ.60 உயர்ந்தது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு சிலிண்டர்கள் வினியோகம் குறைந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கியாஸ் ஏஜென்சிகளில் இருப்பு இல்லை என்று அறிவிப்பு பலகையும் வைத்து உள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர். அவ்வாறு திருவண்ணாமலைக்கு வருகை தரும் மக்களை நம்பி பெரிய, சிறிய, சாலையோர உணவகங்கள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் திருவண்ணாமலை நகரில் உள்ள உணவகனங்கள் தொடர்ந்து செயல்படுவதில் கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. அதனால் கியாஸ் சிலிண்டர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாற்று வழியை தேடி வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள தனியார் கேஸ் நிறுவனம் ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் சி.என்.ஜி. கியாஸ் பங்க்கில் மக்கள் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரில் கியாஸ் நிரப்பி செல்லும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
இந்த தனியார் கேஸ் நிறுவனம் எவ்வித அச்சமும் இன்றி, ஆபத்தையும் உணராமல், சட்டத்திற்கு விரோதமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் சாலையிலேயே பல வாடிக்கையாளர்கள் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு கேஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.
கேஸ் தட்டுப்பாட்டை சாதகமாக கொண்ட இந்த தனியார் நிறுவனம் வீட்டு உபயோக சிலிண்டரில் கேஸ் நிரப்ப ரூபாய் 2000, வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் கேஸ் நிரப்ப 3,500 க்கு மேலும் வாங்கிக் கொண்டு லிட்டர் கணக்கில் கேஸ் நிரப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அந்த கியாஸ் பங்க்கில் வரிசையாக வணிக, வீட்டு உபயோக சிலிண்டர்களை வைத்து வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கியாஸை நிரப்பி சென்றனர்.
இது குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகையில், வணிக, வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்கள் காலியாக இருந்தாலும் அதில் கொஞ்சம் கியாஸ் இருக்கும். அதாவது பிரஷர் காரணமாக தான் கியாஸ் எழும்பி நாம் அடுப்பை பற்ற வைக்கிறோம். ஆனால் கியாஸ் அடியில் இருக்கும் போது பிரஷர் எழும்பாததால் அவை சிலிண்டரிலேயே தேங்கி விடும். இத்துடன் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கியாஸை கலப்பது ஆபத்து ஏற்படும்.
மேலும் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரில் உள்ள கியாஸின் அடர்த்தியும், ஆட்டோக்களுக்கு பயன்படுத்தப்படும் கியாஸின் அடர்த்தியும் வெவ்வேறானவை. இதனால் பிரஷர் காரணமாக சிலிண்டர் வெடிக்கும் அபாயம் உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரில் ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் கியாஸ் நிரப்புவது சட்டப்படி குற்றம் என்றனர்.
எனவே பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு வீட்டு உபயோக சிலிண்டரில் ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் கியாஸ் நிரப்புவதை கண்டறிந்து தடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications