திருவண்ணாமலை தேவி.. அதிகாலையிலேயே கிளம்பி போன இடம்.. மாமியாரின் கோலத்தை பார்த்து ஆடிப்போன போலீஸ்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி அய்யம்மாள் என்பவருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன்கள் உள்ளனர்.இவர் தனது பேத்தியைத்தான் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். பாட்டி என்றோ, மாமியார் என்றோ பார்க்காத மருமகள் என்ன செய்தார் தெரியுமா? திருவண்ணாமலையே அதிர வைத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த 76 வயதாகும் அய்யம்மாளின் கணவர் காசிநாதன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வால் காலமானார். இவர்களுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளின் மகளான 35 வயதாகும் தேவியை, தனது ஒரே மகனான பழனிவேலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் அய்யம்மாள்.

பழனிவேல் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பேருந்து டிரைவராக பணியாற்றி வருகிறார். பழனிவேல், தேவி தம்பதியருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அய்யம்மாள் தனது மகன் பழனிவேலுவுடன் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும், மருமகள் தேவிக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அன்று மாமியார் அய்யம்மாள்- மருமகள் தேவி இடையே தகராறு ஏற்பட்டு்ள்ளதாம். இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளார் பழனிவேல். பின்னர் அவர் பணிக்கு சென்று விட்டார். ஆனால், தேவி மாமியார் அய்யம்மாள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு குழந்தைகள் அனைவரும் அயர்ந்து தூங்கியபின் தேவி, அய்யம்மாளின் அறைக்கு சென்றுள்ளாராம்.
அங்கு தூங்கிக்கொண்டிருந்த அய்யம்மாளின் தலைமுடியை பிடித்து தேவி இழுத்தாராம். இதனால் திடுக்கிட்டு எழுந்த அய்யம்மாளின் தலையை பிடித்து அவர் பலமாக தரையில் மோதிவிட்டாராம். தொடர்ந்து அவர் மாமியாரின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறிய அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது,
இதைத்தொடர்ந்து தேவி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அதிகாலையிலேயே வேட்டவலம் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் தான் மாமியார் அய்யம்மாளை கொன்று விட்டதாக கூறி சரண் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்தனர். கைதான தேவியிடம் விசாரணை நடத்தியபோது சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் காசிநாதன் இறந்த பிறகு அய்யம்மாள் தனது இளைய மகளுக்கு வீட்டில் இருந்த கையிருப்பு பணம் மற்றும் நகைகளை கொடுத்துவிட்டாராம். தனது தாய்க்கு கொடுக்காமல் சித்திக்கு (அய்யம்மாளின் இளையமகள்) கொடுத்தது தேவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்ததாம். இதனால் தான் மாமியார்-மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறுதான் முற்றி கொலையில் முடிந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வேட்டவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications