நாயின் உயிரை காத்த புல்டோசர்.. 15 அடி போர் குழியிலிருந்து மீட்பு - இது திருவாரூர் மாடல்
திருவாரூர்: 15 அடி ஆழ குழியில் விழுந்த நாய் குட்டியை 5 மணி நேர பேராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
திருவாரூர் அருகே குன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வேப்பதாங்குடி சாலையில் மணல், ஐல்லி விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது கடையின் அருகே ஆழ்துளை கிணறுக்காக தோண்டப்பட்டு இருந்த குழியில் நாய் சத்தம் கேட்டுள்ளது.

குழியில் விழுந்த நாய்க்குட்டி
இதைப்பார்த்த மூர்த்தி அருகில் சென்று பார்த்தபோது, ஆழ்துளை கிணறுக்காக போடப்பட்டிருந்த குழியில் நாய் குட்டி ஒன்று விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தி நண்பர்கள் உதவியுடன் நாய் குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். நீண்ட நேரம் முயற்சித்தும் அவர்களால் முடியததால், தீயணைப்புத்துறையின் உதவியை நாடி உள்ளனர்.

புல்டோசர் வரவழைப்பு
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், சுருக்கு கையிறு மூலம் நாய் குட்டியை காலை 8.30 மணி முதல் மீட்டுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. காலம் கடந்து கொண்டே சென்றதால், அதிரடியாக ஜேசிபி புல்டோசர் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.

மனித நேயம்
அதன் மூலம் போர் குழி அருகே பள்ளம் தோண்டி நாய் குட்டியை மீட்பது என முடிவெடுத்தனர். இதையடுத்து மூர்த்தி தனது சொந்த செலவில் வாடகைக்கு ஜேசிபி இயந்திரத்தை உடனடியாக ஏற்பாடு செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த புல்டோசர் இயந்திரம் மூலம் போர் குழிக்கு அருகாமையில் 15 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர் பள்ளத்திலிருந்து போர் குழிக்கு துளையிட்டு நாய் குட்டியை உயிருடன் மீட்டார்.

5 மணி நேர போராட்டம்
சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்குட்டி மீட்கப்பட்டு அதன் தாயுடன் சேர்க்கப்பட்ட சம்பவம் குன்னியூர் கிராம மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புப்படை வீரர்கள் குழிக்குள் இறங்கி நாயையும் பாதுகாப்பாக மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications