வயிறு வலிப்பதாக கூறி காணாமல் போன கஸ்தூரி... கலங்கி நின்ற காவல்துறை... திருவாரூரில் பரபரப்பு!
திருவாரூர்: திருவாரூரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் சாராய வியாபாரி, வயிறு வலிப்பதாக கூறி சிகிச்சை பெற்ற வந்த நிலையில் திடீரென தப்பியோட்டியுள்ளார்.
சாராய வியாபாரி கஸ்தூரி போலீஸாருக்கு தண்ணீர் காட்டிவிட்டு தலைமறைவானதால் மீண்டும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருவாரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வு அம்மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.

சாராய வியாபாரி
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பேரளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி கஸ்தூரி கடந்த சில ஆண்டுகளாகவே சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். 55 வயதாகும் கஸ்தூரியிடம் சாராய விற்பனை தொழிலை கைவிடுமாறு பலமுறை எச்சரித்தும், கண்டித்தும் அவர் திருந்தியது போல் தெரியவில்லை.

பெண்கள் சிறை
இதனிடையே கஸ்தூரியின் சாராய விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, பேரளம் போலீசார் கடந்த 12 ஆம் தேதி கஸ்தூரியை கையும் களவுமாக கைது செய்து வழக்கு பதிவு செய்து திருவாரூரில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 23 -ம் தேதி அன்று தனக்கு வயிறு வலிப்பதாக கஸ்தூரி சிறைக்காவலர்களிடம் கூறியுள்ளார்.

திடீர் மாயம்
இதையடுத்து அவர்களும் கஸ்தூரி மேல் பரிதாபப்பட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்தனர். நேற்று வரை சிகிச்சை பெற்று வந்த கஸ்தூரி நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார்.

கஸ்தூரி தப்பியோட்டம்
மருத்துவமனையில் இருந்து சாராய வியாபாரி கஸ்தூரி தப்பியோடியதை அறிந்து சிறைக்காவலர்கள் கடும் அதிர்ர்சி அடைந்ததோடு, அது தொடர்பான தகவலை மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து சாராய வியாபாரி கஸ்தூரியை மீண்டும் கைது செய்யும் வகையில் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட 55 வயது பெண் கைதி ஒருவர் தப்பி ஓடிய நிகழ்வு திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications